(க-து.) நண்பரிடத்தில் முகமலர்ச்சி துளும்பும்; வறிஞர்களுக்கு வழங்குமிடத்துப் பொருட்டிரள் இன்பந்தரும்; கணவனைப் போற்றி அவன்வழியி னிற்றலாற் பெண்டிர் இனியவராவர்; பாடலுணர்வாரிடத்துப் பண் இனிமை தரும். (வி-ரை.) ‘நகை'யுந் ‘தொகை'யுந்தொழிற்பெயர்; பொருளின் தொகை பொருட்கூட்டு. ‘வகை' யென்பது, நினைவு சொற்செயல்களின் நல்வகையை; அஃதாவது சிறப்பை யுணர்த்திற்று; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நால்வகைக் குணமுடைமையுமாம். பேணுதல், உண்டி முதலிய வேண்டுவ கொடுத்துக் காத்தல்; வழிபடல் - கணவன் கருத்துவழி நிற்றல்.பாடல் - தொழிற்பெயராதலின், ஈண்டுப் பாடுதற்றொழிலென்று கொள்க. இனிது : குறிப்பு வினைமுற்று. ‘பொருளின் தொகை யினிது தொட்டு வழங்கின்' என்பதனை, ‘உப்புக் குவட்டின் மிசையிருந்து உண்ணினும், இட்டுண்ணாக் காலது கூராதாம்' என்னும் உவமானத்தாற் கண்டு தெளிக. (39) 40. கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் 1செல்சாரொன் றீவார் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல் செய்யாமை 2செல்சா ருயிர்க்கு. (இ-ள்.) கரப்பவர்க்கு - ஏதும் இல்லையென்று ஒளிப்பவர்களுக்கு, சொல்சார் - அவர் மேற்கொள்ளுஞ் சார்பு, கவிழ்தல் - இரந்து வருவாரைக் கண்டவிடத்து முகங்கவிழ்ந்து நிற்றலாம்; எஞ்ஞான்றும் - எக்காலத்திலும், இரப்பவர்க்கு - இல்லையென்றுஇரக்கின்றவர்களுக்கு, செல்சார் - செல்லுதற்குரிய பற்றுக்கோடு, ஒன்று ஈவார் - தாம் வேண்டுவதொன்றை ஈத்துவக்குஞ் செல்வராவர், பரப்பு அமைந்த - போரிற் சுறுசுறுப்புடைய, தானைக்கு - சேனைகளுக்கு, செல்சார் - பற்றுக்கோடு, தறுகண்மை - வீரமாம்; உயிர்க்கு - ஒருவனது உயிர்க்கு, செல்சார் - செல்லுதற்குரிய பற்றுக்கோடு, ஊன் உண்டல் செய்யாமை - பிறவுயிர்களின்ஊனுண்ணலைச் செய்யாதிருத்தலாம்.
(பாடம்) 1 செல்சார் வொன்றீவோர். 2 செல்சார் வுயிர்க்கு.
|