(க-து.) இல்லையென்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பாரைக் கண்டக்கால் முகங்கவிழ்தலே அவர் செயலா யிருக்கின்றது; இரப்பவர்கட்கு ஈகையறமுடைய செல்வரே பற்றுக்கோடாவர்; பரபரப்புள்ள சேனைகட்கு வீரமே ஒரு பற்றுக்கோடு; ஊனுணவு கொள்ளாமல் அருளொழுக்கத் தோடிருத்தலே உயிர்கட்கு ஒருபற்றுக்கோடான நிலையாம். (வி-ரை.) சார் : முதனிலைத் தொழிற்பெயர்; ‘சார்பு' என்பது பொருள்; அஃதாவது சார்ந்து நிற்றற்குரிய நிலை, அல்லது பற்றுக்கோடென்க. ‘செல்' என்பதைக் கருத்து நோக்கிப் பொருளுரைத்துக் கொள்க. கரப்பவர் செல்லுதலாவது மேற்கொள்ளுதல்; இரப்பவர் செல்லல் - அடுத்தல்; தானைக்குச் செல்லல் - இடந்தரல்; உயிர்க்குச் செல்லலென்பதும் மேற்கோடலாம். தறுகண்மை - இரங்காமைக்கு ஏதுவான மறம். செல்சார் : வினைத்தொகை. (40) 41. கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப அமைந்தார் - முனியாதார் முன்னிய செய்யுந் திரு. (இ-ள்.) கம்மியர் - கம்மாளர், கண்டதே செய்ப - தாங்கண்ட பொருள்போன்றவற்றையே செய்வர்; புலன் ஆள்வார் - அறிவை ஆளும் பேரறிஞர், உண்டுஎனக் கேட்டதே - பயனுண்டு எனக் கேள்வியாற் றெளிந்தவற்றையே, செய்ப - செய்வர்; அமைந்தார் - நல்லியல்புகளமைந்த சான்றோர், வேட்ட - பிறர் விரும்பிய, இனியவே செய்ப - இனிமையாயின வற்றையே செய்வர்; திரு - திருமகள், முனியாதார் யாரையுஞ் சினவாத பெரியோர்கள், முன்னிய செய்யும் -எண்ணியவற்றையே முடித்து வைக்கும். (க-து.) கம்மாளர் தாங் கண்ணாற்கண்ட பொருள்போன்றவற்றையே செய்வர்; அறிஞர் பயனுள்ளவையெனக் கல்வி கேள்விகளாற் றெளிந்தவற்றையே செய்வர்; சான்றோர் பிறர் விரும் பியவற்றுள் இனிமையாயினவற்றையே செய்வர்; திருமகள் எவரையுஞ் சினவாத பெரியவர்கள் கருதியவற்றையே செய்யா நிற்பள். (வி-ரை.) கண்டது கேட்டது முதலியவை செயப்பாட்டு வினைப்பொருளன. ஆம் : ஆசை, கம்மியர் - தொழில் செய்.
|