(க-து.) போரில்லாவிடின் வீரரின் சிறப்புக் கெடும்; வேரற்று விடின் மரங்கள் படும்; நீரற்றுவிடின் நெய்தல் உலரும்; படையில்லாவிடின் வேந்தனது சீர்மைஅழியும். (வி-ரை.) மடை : தொழிலடியாகப் பிறந்த பெயர். மடு : பகுதி, ஐ : வினைமுதற் பொருண்மை விகுதி. நீரை நிறைத்து நிற்பது என்பது பொருள். மடையின்றி- மடைக்கண் நீரின்றியென விரிக்க. மன்னர்க்குச் சீரென்றது அவரது அரசாட்சிச் செல்வத்தையென்க. பொருநர் சீர் என்பதையும் அவர்க்குரிய வீரச் சிறப்பென்றே யுரைத்துக்கொள்க. மடை - வாய்க்கால்; குளமுமாம். (44) 45. ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும் காதலா ரென்பார் தகவுடையார் - மேதக்க தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள் முந்துதான் செய்த வினை. (இ-ள்.) ஏதிலார் என்பார் - அயலாரென்று கருதப்படுபவர்கள், இயல்பு இல்லார் - நல்லியல்பில்லாதவர்கள்; யார் யார்க்கும் - யாவர்க்கும், காதலார் என்பார் - அன்பரெனப்படுவார், தகவு உடையார் - நல்லியல்புடையவர்கள், மேதக்க - மேன்மையான, தந்தை யெனப்படுவான் - தந்தையென்று சொல்லப்படுபவன், தன் உவாத்தி - தன் ஆசிரியனாவான்; தாய் என்பாள் - மேன்மையான தாயென்று சொல்லப்படுபவள், முந்து - முற்பிறப்பில், தான் செய்த வினை - தான்செய்த நல்வினையாகும். (க-து.) ஒருவனுக்கு நல்லியல்பில்லாதவர் அயலார்; யார்க்கும் நல்லியல்புடையவரே அன்பர்; மேலான தந்தை யெனப்படுபவன் ஆசிரியன்;தாயெனப்படுபவள் முன் செய்த நல்வினையாகும். (வி-ரை.) ஏதிலார் - ஒற்றுமைப்படுதற்குரிய ஏதுஇல்லாதவர்; அவர் பகைவருமல்லர், நண்பருமல்லர், அயலாரென்க.‘யார் யார்க்கும் ஏதிலார்' எனக்கூட்டியுரைத்தலுமாம். உடம்பை வளர்க்குந் தந்தையைப்போலவே அறிவென்னு முடம்பை ஆசிரியன் வளர்த்தலின் அவனுந் தந்தையெனப்பட்டான்; அழிந்துபோம் ஊனுடம்பை வளர்ப்பானைவிட அழியாத அறிவுடம்பை வளர்க்கும் ஆசிரியன் மேலானவனாதலின், அவன் மேதக்கதந்தை
|