பக்கம் எண் :

45

 47. நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் - சென்ற
விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர்; ஊடல்சாம் 
ஊடல் உணரா ரகத்து.

(இ-ள்.) நன்று அறியாதார் முன்னர் - பிறர் செய்யும் நன்மைகளை நன்மையெனத் தெரிந்துகொள்ளாதவர்பால், நன்றிசாம் - செய்ந்நன்றி கெடும்; விருப்பு இலார் முன் - அன்பில்லாதவரிடத்தில், சென்ற விருந்தும் - போன விருந்தினரும், சாம் - வாடுவர்; பண் அறியாதார் முன்னர் - பண்ணிசையை யறியாதாரிடத்தில் : அரும் புணர்ப்பின் - அரிய இசை நிரவல்களையுடைய, பாடல் சாம் - பாட்டுக்கள் கெடும்; ஊடல் உணராரகத்து - ஊடுதலி னினிமையைத் தெரிதலில்லாத கணவரிடத்தில், ஊடல் சாம் -ஊடுதல் கெடும்.

(க-து.) நன்மையறியார்மாட்டுச் செய்ந்நன்றி கெடும்; அன்பில்லார்மட்டும், செல்லும் விருந்தினர் வாடுவர்; இசையறியார் மாட்டு அரிய இசைப் பொருத்தங்களுடன் பாடும் பாட்டுப் பயனின்றாம்; புலவியுணரார் மாட்டுப்புலத்தல் கெடும்.

(வி-ரை.) ‘முன்' ‘அகம்' எனபன ஏழாவதன் இடப்பொருளன. சாம் என்பதில் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது; ‘சாகும்' என விரிக்க. அரும்புணர்ப்பென்றது மிடற்றொலியும், யாழ் முதலிய இசைக் கருவிகளி னொலியும், பாடற் பண்ணும் ஒத்திசைக்கும் பொருத்தமும், நுண்ணிய இசை நிரவல்களும் பிறவுமாம்; இவ்வியல்பு முதலியவற்றைக், ‘கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங், குழல்வழி நின்றது யாழே யாழ்வழித், தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே, முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை' யென வருஞ் சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையடிகள் (138-142) முதலிய வற்றானும், அவற்றி னுரைகளானுங் கண்டு கொள்க. ‘பாடல் சாம் பண்ணறியாதார் முன்னர்' என்று ஈண்டுக் கூறியது போலவே, ‘பண்ணினது பாடலுணர்வா ரகத்து' என உடம்பாட்டாலும் முன்னுங் (37) கூறினார்.நன்றிக்குச் சாமென்றது மறப்பை, ஊடலுணர்தல் - ஊடுதலின் அளவையும் மாட்சிமையையும் அறிந்து ஒழுகுதல். ஊடல் -கலவியிற் பிணங்கல்.

(47)