பக்கம் எண் :

46

 48. நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைகலந் தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில்.

(இ-ள்.) மலர் உண்மை - மலரின் இருப்பை, நாற்றம் உரைக்கும் - அதன் மணமே அறிவிக்கும்; வினை நலம் -ஒருவனது செய்கைத் திறத்தை, கூறிய மாற்றம் உரைக்கும் - அவன் சொன்ன சொல்லே அறிவிக்கும்; தூக்கின் -ஆராய்ந்தால், அகம் பொதிந்த தீமை - நெஞ்சிற் செறிந்த தீமைகளை, மனம் உரைக்கும் - அவனது நெஞ்சமே அவனுக்கு அறிவிக்கும்; முன்னம் - ஒருவன் உள்ளக் குறிப்பை, முகம்போல - அவன் முகத்தைப் போல, முன் உரைப்பது இல் -முற்படத் தெரிவிப்பது வேறில்லை.

(க-து.) மலரின் உண்மையை அதன் மணமும், ஒருவன் செயற்றிறனை அவன் சொல்லும். நெஞ்சிற் செறிந்த தீமையை அவன் நெஞ்சமும், உள்ளக் குறிப்பைமுகமும் அறிவித்துவிடும்.

(வி-ரை.) பிரிநிலையேகாரம் விரித்துக்கொள்க. உண்மை : குறிப்புத் தொழிற்பெயர். அகம் பொதிந்த வென்பது பொருட் பெருக்குடையது.மனமுரைக்கு மென்றார். ‘தன்னெஞ்சே தன்னைச் சுடலின்'; ‘நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலி' னென்பது கலித்தொகை (நெய்தல், 8.) ‘முன்னுரைப்ப' தென்றார் நெஞ்சுற்றதைப் பிறர்க்கறிவிப்பதில் அஃதொன்றே முற்பட வறி வித்தலி னென்பது; நாயனாருந் ‘தான் முந்துறு' மென்றதனையே சுட்டினார் (திருக்குறள், 71; 7). ‘இல்லை ‘யென்பதன் ஐ தொக்கு ‘இல்' என்று நின்றது.

(48)

 49. மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்
தவமில்லார் இல்வழி இல்லை தவமும் 
அரச னிலாவழி 1 இல்லை அரசனும்
இல்வாழ்வார் இல்வழி யில்.

(இ-ள்.) மழையின்றி - மழையில்லாமல், மாநிலத்தார்க்கு - இப் பேருலகத்தின் மக்கட்கு, இல்லை - நலமில்லை;


(பாடம்) 1 அரசிலார் - இல்வழி.