விரும்புவார்கள்; அல்லாரை - நாணுடையரல்லாத மகளிர்பால், அல்லார் - தீயோர், உவப்பது - விரும்புவது, கேடு - தீயஒழுக்கமேயாம். (க-து.) யானையை யுடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள்; அரசர்கள் விரைந்த செலவையுடைய குதிரையை விரும்புவார்கள்; நல்லியல் புடைய ஆடவர்கள் நன் மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள்; தீய ஆடவர்கள் தீய பெண்டிர்பால் தீதையே விரும்புவர். (வி-ரை.) கதன் : ஈற்றுப் போலி.கடுமை, இங்கு விரைவின்மேலது. பரிமா : இருபெயரொட்டு, பெண்மக்களிடத்தில் உள்ள தீயவை புரியாத நாணத்தை நல்லவர்கள் விரும்புவார்கள் : ஆனால் தீயவர்கள் அந்நாணத்தை விரும்பாது தீயவை புரியும் நாணங்கெட்ட தன்மையையே விரும்புவ ரென்க.செய்யத் தகாதனவற்றின் கண் உள்ள மொடுங்குதலை நாண மென்பார் நச்சினார்க்கினியர்.நல்லாரை, அல்லாரை; உருபு மயக்கம். (56) 57. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ டெண்ணக் கடவுளு மில். (இ-ள்.) கண்ணின் - கண்ணைப்போல், சிறந்த உறுப்பு - மேலான உறுப்பு, இல்லை - ஒருவனுக்கு வேறில்லை; கொண்டானின் - தன்னைத் திருமணஞ் செய்து கொண்ட கணவனைப் போல, துன்னிய கேளிர் - நெருங்கிய உறவினர், பிறர் இல்லை - (குலமகளிர்க்கு) வேறொருவருமில்லை; மக்களின் - தம் மக்களைப்போல், ஒண்மையவாய் - ஒளியுடையவாய், சான்ற - அமைந்த, பொருள் - வேறு பொருள், இல்லை - பெற்றோர்க்கில்லை; ஈன்றாளோடு - தாய்க்கு நிகராக, எண்ண - மதிப்பதற்குரிய, கடவுளும் இல் - கடவுளும்வேறில்லை, (க-து.) ஒருவனுக்குக் கண்ணைப்போல மேலான உறுப்பு வேறில்லை; குலமகளுக்குக் கணவனைப்போல நெருங்கிய உறவினர் வேறில்லை; பெற்றோர்க்கு மக்களைப்போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை; குழந்தைகட்குத் தாயைப்போல மேலான கடவுள் வேறெதுவுமில்லை.
|