(வி-ரை.) இன்னும் ஓடும் ஒப்புமைக்கு வந்தன. கொண்டான் : வினையாலணையும் பெயர். ‘ஒண்மையவாய்ச் சான்ற பொரு' ளென்றது, ஏனை எல்லாப் பொருள்களினும் அறிவொளியுடைய பொருளாய்ப், பெற்றோர்க்கு இம்மை மறுமைப் பயன்களை விளைவிப்பதாய்ப், பிறவி முழுவதும் உரியதாய் அமைந்து நிற்றலினென்பது; ‘தம்பொருளென்ப தம் மக்கள' (மக்கட்பேறு, 3)என்னும் வள்ளுவர் திருமொழியை இங்கு உற்று நோக்குக.கேளிர் : கேண்மை யென்னும் பண்படியாய்ப் பிறந்த பலர்பாற் படர்க்கைப் பெயர். உம்மை : உயர்வு சிறப்பு. ‘கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை கல்வியின், நுண்ணிய வாய பொருளில்லை - கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை யீன்றாளோ, டென்ன கடவுளு மில்' - என்பது பாடவேறுபாடு. (57) 58. கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார் செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும் புற்றன்னர் புல்லறிவி னார். (இ-ள்.) கற்றாரை - கல்வியறிவுடையவர்களை, காதலர் - அன்பால் விரும்புகின்றவர்கள், கற்றன்னர் - அக்கல்வியறிவு உடையவர்களை ஒப்பர்; கண் ஓடார் - பிறர்பாற் கண்ணோட்டமில்லாதவர்கள், செற்றன்னர் - துன்பஞ்செய்யாதாரை ஒப்பர்; தெற்றென - தெளிவாக, உற்றது - உண்மையை, உரையாதார் - சொல்லாதவர்கள், செற்றாரைச் சேர்ந்தவர் - பகைவரை ஒப்பர்; புல்லறிவினார் - கீழ்மை யறிவுடையவர்கள், பாம்பு உள் கரந்து உறையும் - பாம்பு உள்ளே மறைந்து வாழும், புற்று அன்னர் - புற்றைஒப்பர். (க-து.) கல்வியறிவுடையவர்களை விரும்பி உடனிருப்பவர்கள், அக்கல்வி யறிவுடையவர்களுக்கு ஒப்பாவர்; கண்ணோட்ட மில்லாதவர்கள் இடர் செய்வாரை ஒப்பர்; உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவார்கள்; சிற்றறிவுடையார் பாம்புப்புற்றுக்கு ஒப்பாவர். (வி-ரை.) கற்றன்னர் - கற்றால் அன்னர்; கற்றால் என்பது ஈறு தொகுத்தலாய் நின்றது; செற்றன்ன ரென்பதும் அது. காதலர் : வினைக்குறிப்புப் பெயர். உற்றது -நெஞ்சத்துட்
|