பக்கம் எண் :

60

(வி-ரை.) கெழி : பண்புப் பெயர்; கெழு : பகுதி, இ : பகுதிப் பொருள் விகுதி யென்க. இன்மை இரண்டுங் குறிப்புத் தொழிற்பெயர். ‘பொருளின் நிகழ்ச்சி' யென்றது, பொருளின் வரவையும், வந்து நல்வினைகளிற் செலவாகும் அறச்செலவையுங் குறிக்கும். ஆக்கம் - எல்லா வகையிலும் மேலும் மேலும் உயர்வதனால் நல்லூழ் எனினுமாம். போற்றாதாருமென எச்சவும்மை விரித்துக் கொள்க. பழி - நடுவுநிலை யின்மை ; முதனிலைத் தொழிலாகுபெயர்.

(64)

 65. கண்ணுள்ளுங் காண்புழிக் காதற்றாம் - பெண்ணின்
உருவின்றி மாண்ட வுளவா - மொருவழி
நாட்டுள்ளு நல்ல பதியுள - பாட்டுள்ளும்
பாடெய்தும் பாட லுள.

(இ-ள்.)கண்ணுள்ளும் - மக்களின் கண்களுள்ளும், காண்புழி - ஆராயுமிடத்து, காதற்றுஆம் - விரும்பப்படுதலான கண்ணும் உண்டு; பெண்ணின் - பெண்மக்களுள், உருஇன்றி - அழகில்லையாயினும், மாண்ட - மாட்சிமைப்பட்ட இயல்புகள், உளஆம் - உள்ளனவாகும்; நாட்டுள்ளும் - ஒரு நாட்டினுள்ளும்; ஒரு வழி - எங்கேனும் ஒரு பகுதியில், நல்ல பதி உள - வளமான ஊர்களுள்ளன; பாட்டுள்ளும் - பாட்டுகளுள்ளும், பாடு எய்தும் - பெருமை மிக்க, பாடல் உள -பாட்டுகளிருக்கின்றன.

(க-து.) கண்களுள்ளும் விரும்பப்படும் கண்களுள்ளன : அழகில்லாத பெண்டிருள்ளும் மாட்சிமைப்பட்ட நல்லியல் புடையோருண்டு. நாட்டினுள்ளும் ஒரு பாங்கர் வளமான ஊர்களுள்ளன.பாட்டுகளுள்ளுஞ் சிறப்பான பாட்டுகளுள்ளன.

(வி-ரை.) விரும்பப்படும் கண்களாவன கண்ணோட்டமுடைய கண்கள். உம்மைகள் எச்சம். காண்புழி காண் : பகுதி. ப் : எழுத்துப்பேறு, உ : நிகழ்கால வினையெச்ச விகுதி. பெண்ணென்னு மிடத்தும் உம்மை வருவித்துக் கொள்க. ஒருவழி யென்பதைச் சிறுபான்மையெனக் கொண்டு ஏனையவற்றோடு கூட்டி யுரைப்பினுமாம், நல்ல வென்றது ஈண்டு வளத்தின் மேற்று. பாட்டுக்குப் பாடென்றது, சொல்பொரு ளிசைகளிலென்க. இன்றி யென்பதனீற்றில் இழிவு சிறப்பும்மை தொக்கது. பாடல் :தொழிலாகுபெயர்.

(65)