வித்தின் முளைக்குழாம் - விதைகளின் முளைக்கூட்டம், உண்டாம் - தோன்றும்; ஒண் செய்யாள் - விளக்கமுடைய திருமகள்; பார்த்துறின் - அருள் செய்யின், திருக்குழாம் உண்டாகும் - பொருட்டிரள் பெருகும்; அவள் - அத்திருமகள், துன்புறுவாளாகின் - அருவருப்பாளானால், கெடும் - உள்ளசெல்வமும் அழியும். (க-து.) செல்வமுடையானுக்கு விரும்பிய பொருள் கிடைக்கும்; நீருண்டானால் விதைகள் முளை கிளம்பும்; திருமகள் கூடினாற் செல்வம் பெருகும்;அவள் நீங்கினாற் செல்வம் அழியும். (வி-ரை.) கைத்து - முதன்மை பற்றிச் செல்வத்தின் மேற்று.காமுற்றது.காமுறு : பகுதி; அ : சாரியை, து : ஒன்றன் படர்க்கை விகுதி. பகுதி ஒற்றிரட்டி இறந்தகாலம் காட்டிய வினைப்பெயர்.செய்யாள் - செம்மை என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். செம்மை : பகுதி.ஆள் என்னும் விகுதிப் புணர்ச்சியில் ‘மை' விகுதி கெட்டு, மகரம் யகரமாகி அது தனிக்குறின் முன்னொற்றாதலின் இரட்டி முடிந்தது. பொருள் நடுவுநிலைமையுடையாள் என்பது.வித்தின் முளை - ஆறன் தற்கிழமை பார்த்துறி னென்றது உடையானது நல்லியல்பின் பொருட்டெனவும், துன்புறுவாளென்றது அவன்றன் தீமைக்கெனவுங் கொள்க. மற்று :வினைமாற்று. (67) 68. ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப் புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின் அரசியான் இன்புறூஉங் கீழெல்லாந் தத்தம் வரிசையான் இன்புறூஉம் மேல். (இ-ள்.) ஊன் உண்டு - ஊனுணவை யுட்கொண்டு, உழுவை - புலி, நிறம் பெறூஉம் - மேனியமையும்; நீர் நிலத்து - ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள, புல்லினான் - புல்லினை மேய்ந்து, காலேயம் - ஆனிரைகள், இன்புறூஉம் - இன்புறும்; நெல்லின் அரிசியான் - நெல்லரிசிச் சோற்றினால், கீழ் எல்லாம் - கீழ்மக்களெல்லாரும், இன்புறூஉம் - இன்புறுவர்; மேல்-மேன்மக்கள், தத்தம் - தங்கள் தங்கள் தகுதிக் கேற்ற, வரிசையான் - மதிப்புச் செயல்களால், இன்புறூஉம், இன்புறுவர்.
|