பக்கம் எண் :

64

மஞ்சரியா - 20) என்றார் சிந்தாமணியினும், தவா: பலவின் படர்க்கை எதிர்மறை வினைமுற்று; தவு ஆ : உகரங் கெட்டது சந்தி. அவா : முதனிலைத் தொழிற் பெயர்.

(69)

 70. கைத்தில்லார் நல்லவர் 1கைத்துண்டாய்க் காப்பாரின்
வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் - செய்தாரின்
நல்லர் சிதையா தவர்.

(இ-ள்.) கைத்து உண்டாய் - செல்வம் உள்ளவராய், காப்பாரின் - அச் செல்வத்தை நுகராமற் சேர்த்துப் பாதுகாப்பவரைவிட, கைத்து இல்லார் - அச் செல்வமில்லாத மாந்தர், நல்லவர் - நல்லவரேயாவார்; வைத்தாரின் - அப்பொருளை வைத்திழப்பாரைவிட, வறியவர் நல்லர் - வறுமையுடையோர் நல்லராவர்; பைத்து எழுந்து - சினந்தெழுந்து, வைதாரின் - பிறரை வைதவர்களைவிட, பொறுப்பவர் - அவ் வைதலுரையைப் பொறுப்பவர்கள், நல்லர் - மிகவும் நல்லராவர்; செய்தாரின் - நன்மை செய்தவர்களைவிட,சிதையாதவர் - அந்நன்மையை மறவாதவர்கள், நல்லர் - மிகவும்நல்லராவார்கள்.

(க-து.) செல்வமிருந்தும் பயனடையாதவர்களைவிட அச் செல்வமில்லாதவர்கள் நல்லவர்கள்; செல்வத்தைச் சேர்த்து வைத்து இழப்பாரினும் வறியவர் மிக நல்லவர்; சினந்தெழுந்து வைதாரினும் அதனைப் பொறுப்பவர் மிகவும் நல்லவர்; ஒரு நன்றி செய்தாரினும் அச் செய்நன்றியை மறவாதவர் மிகநல்லர்.

(வி-ரை.) இன்னென்னும் ஐந்தனுருபுகள் எல்லைப்பொருளன. பைத்தல் - சினத்தல்.செல்வத்தைத் தேடுவதனாலும் பாதுகாப்பதனாலுமான உழைப்புங் கவலையுமில்லாமையின், கைத்திலாரும் வறியவரும் நல்லராயினார். சினத்தலாலும் வைதலாலுமான தீமைகள் நிகழாமையானும் பொறுமைப் பழக்கம் விஞ்சுதலானும் பொறுப்பவரும், நன்று செய்தாரினும் அந்நன்றியை மறவாதவர்க்கு அவ்வுணர்ச்சி என்றும் உளத்திடை நிகழ்ந்து எண்ணத்தைத் தூய்மைப் படுத்துதலின் மறவாதவரும் நல்லராயினாரென்க. பை - பாம்பின் படம் ; பைத்தல் - படம் விரித்தல்; சினத்தல். பாம்புசினத்தாற் படத்தை விரிக்குமென்க.

(70)


(பாடம்) 1 கைத்திழந்த மாக்களின்.