பக்கம் எண் :

70

முன்னும் வந்தது. காதலவர்: ஈறு திரிந்த குறிப்பு வினைப்பெயர். தமருள்ளும் - உம்மை :உயர்வு சிறப்பு.

(76)

 77. தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்
சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்
விடுகென்ற போழ்தே விடுக உரியான்
தருகெனின் தாயம் வகுத்து.

(இ-ள்.) பொய் பிறந்தபோழ்தே - நட்பினர்க்கும் பொய் யுண்டான போதே, தூர்ந்து ஒழியும் - நட்புக்கெடும்; மருத்துவன் - மருந்து கொடுப்போன், சொல்க என்ற போழ்தே - சொல் என்று சொன்னபோதே, பிணி உரைக்கும் - நோயாளன் பிணியை யுரைப்பான்; நல்லார் - பெரியார், விடுக என்ற போழ்தே - ஒரு செயலை விடுக வென்ற பொழுதே, விடுக - அச் செயலை விட்டிடுக; உரியான் - ஒரு பொருட்குரியான், தருக எனின் - கொடுவென்றால், தாயம் - அவன் பாகத்தை, வகுத்து (விடுக) - பங்கிட்டுக் கொடுத்து விடுக.

(க-து.) பொய்பிறந்த போதே நட்புக் கெடும்; மருத்துவன் சொல்லென்றபோதே பிணியாளன் நோய் சொல்வான் ; பெரியார் ஒரு செயலை விடுகென்ற பொழுதே அற விட்டொழிக; உரியான் தருகென்ற பொழுதே அவன் பங்கை வகுத்துத் தந்து விடுக.

(வி-ரை.) ‘தூர்ந்தொழியு' மென்றது. உருவகவினை, ஏகாரம் : தேற்றம்; மருத்துவன் சொல்லென்றால் மட்டும் பிணியாளன் உண்மையைச் சொல்வானென்று கருத்துக்கொள்க. பிணியை அஃதுடையானென் றுரைப்பினுமாம், வகுத்தென்பதற்கும் விடுக வென்பது கூட்டுக. ‘அதற்குரியான் தாவெனில் தாயம் வகுத்' தென்பதும் பாடம். சொல்க முதலியவற்றில் அகரம் தொகுத்தல்.தாயம் பங்கிட்டுத் தாரானாயின் வழக்குண்டாகும்; அதனாற் பொருள் குறைந்துபோம்; ஆதலால் ‘விடுக' என்றார். மருத்துவன் : பொருளடியாகப்பிறந்த பெயர் ; மருத்து + வ் + அன்; வ் : பெயரிடைநிலை. மருந்து - பொருள்: மருந்திழைத்துக் கூட்டிக் கொடுப்போன்; போழ்தே - ஏ : தேற்றம்.

(77)

 78. நாக்கினறிப இனியதை - மூக்கினான்
மோந்தறிப வெல்லா மலர்களும் நோக்குள்ளும்