ளலாம். அவா......... வலையில் என்பதற்கு நன் மாணாக்கனது விருப்பம் பலநூல் வலையில் உட்படும் என்றுரைப்பாரும் உளர். (81) 82. கொடுப்பின் அசனங்கொடுக்க - விடுப்பின் உயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற் கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல். (இ-ள்.) கொடுப்பின் - ஒருவர்க்கு ஒன்று கொடுப்பதானால், அசனம் கொடுக்க - சோறுகொடுத் துண்பிக்க; விடுப்பின் - ஒன்றை விட்டுவிடுவதானால், உயிர் இடையீட்டை - உயிரைப்பற்றிய பற்றை, விடுக்க - விட்டுவிடுக; எடுப்பின் - ஒருவரைத் தாங்கி மேலுயர்த்துவதனால், கிளையுள் - தன் சுற்றத்தாருள், கழிந்தார் - வாழ்நலங்களற்று ஏழைகளாயுள்ளவர்களை, எடுக்க - தாங்கி மேலுயர்த்துக; கெடுப்பின் - ஒன்றைக் கெடுப்பதானால், வெகுளி - சினத்தை, கெடுத்துவிடல் - கெடுத்து விடுக. (க-து.) கொடுப்பதானால் ஏழைகட்கு உணவு கொடுக்க; விடுப்பதானாற் பற்றை விடுக்க; எடுப்பதானால் சுற்றத்தாருள் ஏழைகளை எடுக்க;கெடுப்பதானால் வெகுளியைக் கெடுக்க. (வி-ரை.) அசனம் - வடசொல்; உணவு கொடுத்தல், உடம்பில் உயிரை நிலைப்பித்தலன்றி வேறு தீயவற்றிற்கு நேராய்ப் பயன்படுதலின்மையின், ‘அசனங் கொடுக்க' என்றார்; உயிரிடையீடு - உயிர்க்கண் பொருந்திய குற்றம்; அஃது பற்று. இடையீடு இங்கே குற்றங்குறித்தது. கெடுத்துவிடல்:அல்லீற்று வியங்கோள். (82) 83. நலனும் இளமையு நல்குரவின்கீழ்ச்சாம் குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. (இ-ள்.) நலனும் - அழகும், இளமையும் - இளமையியல்பும், நல்குரவின்கீழ் - வறுமைக்கண், சாம் - மங்கும்; குலனும் - குலத்துயர்வும், குடிமையும் - குலத்தொழுக்கமும், கல்லாமைக் கீழ் - கல்லாமைக்கண், சாம் - கெடும்;வளம்
|