இல் - நீர் வருவாயில்லாத, குளத்தின்கீழ் - ஏரியின்கீழ் விளையும், நெல் சாம் - நெற்பயிர் சாவியாம்; பரமல்லா - சுமத்தலாற்றாத, பண்டத்தின் கீழ் - சுமைப் பொருளின் கீழ்த் தாங்கும், பகடு சாம் - எருதுகள் சாகும். (க-து.) அழகும் இளமையும் வறுமையிற் கெடும்; குலத்துயர்வுங் குலத்தொழுக்கமுங் கல்லாமையிற் கெடும்; வருவாயற்ற ஏரியின்கீழ் விளையும் நெற்பயிர் சாவியாம்; சுமத்தலாற்றாத சுமையைத் தாங்கும் எருதுகள் சாகும். (வி-ரை.) ‘குடிமை' உயர் குடிப்பிறந்தாரது ஒழுக்கத்தை யுணர்த்துதல், ‘குடிமை - குடிசெய்தற் றன்மை (மடியின்மை, 8.)யென்றும், ‘குடிமை - உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை' (குடிமை) யென்றும் ஆசிரியர் பரிமேலழகர் திருக்குறளுரையி லுரைக்குமாற்றானறிக. வளம் - ஈண்டு வருவாய். பரமல்லா - சுமக்கலாற்றாத வென்க; பரமல்லாப் பண்டம் - சுமக்குமளவிற்கு விஞ்சிய பண்டம். கீழ் முதலிரண்டும் ஏழாம் வேற்றுமை இடப்பொருளன. சாகுமென்னுஞ் செய்யுமென் முற்று, ஈற்றயல் மெய்யொடுங் கெட்டுச் சாமென நின்றது. பகடு - வண்டியிழுக்கும் எருது. (83) 84. நல்லார்க்குந் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை - யல்லாக் கடைகட்குந் தம்மூரென் றூரில்லை தங்கைத் துடையார்க்கும் எவ்வூரு மூர். (இ-ள்.) நல்லார்க்கும் - கல்வியறிவில் நல்லார்க்கும், தம் ஊர் என்று - தமக்குரிய ஊர் என்று, ஊரில்லை-ஓரூருமில்லை, எல்லாம் அவரூரேயாம்; நல் நெறி - தவநெறியில், செல்வார்க்கும் ஒழுகும் அருந்தவத் தோர்க்கும், தம் ஊரென்று - தமக்குரிய ஊரென்று, ஊர் இல்லை - ஓர் ஊர் இல்லை; அல்லா - மேலோரல்லாத, கடைகட்கும் - கீழ்மக்களுக்கும், தம் ஊரென்று - தமக்குரிய ஊரென்று, ஊர் இல்லை - ஓரூருமில்லை; தம் கைத்து - தமது கையில், உடையார்க்கும் - பொருளைடையவர்க்கும், எவ்வூரும் ஊர் - எவ்வூரும் தம்மூரே யாம்.
|