(இ-ள்.) வால் இழையார் முன்னர் - ஒள்ளிய நகைகளை யணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன், வனப்பு இல்லார் -அழகில்லாத ஆடவர், பாடு இலர் - பெருமை இலர்; சாலும் - கல்வி கேள்விகளான் நிறைந்த, அவைப்படின் - அவையிற் புகுந்தால், கல்லாதான் - கல்வியறிவில்லாதவன், பாடு இலன் - பெருமையில்லாதவனாவன்; கற்றான் ஒருவனும் - கற்றறிவுடையானொருவனும், கல்லாதார் (முன்னர்ப் படின்) - படியாதவரிடஞ் சேர்ந்தால், பாடு இலனே - பெருமை இலனாவன்; பேதையார் முன்னர்ப் படின் - அறிவிலார்பாற் சேரினும்; பாடு இலனே -அறிஞன் பெருமையிலனேயாவன். (க-து.) அழகிய பெண்டிர்க்கு முன்னர் அழகில்லாத ஆடவர் பெருமையடைதலில்லை; கற்றா ரவையிற் கல்லாதான் பெருமை யடைதலில்லை; கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதலில்லை; அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதலில்லை. (வி-ரை.) வாலிழையா ரென்னுங் குறிப்பினால் வனப்பிலார் ஆடவராயினார். உம்மை இறந்ததுதழீஇய எச்சம். ஏகாரம் இரக்கப்பொருளது, பேதையார் முன்னர்ப் படின் - உம்மை வருவித்துப் பொருளுரைக்கப்பட்டது. முன்னர்ப்படி னென்றதை முன்னுங் கூட்டி நான்காகக் கொள்க;செய்யு ளொவ்வொன்றும் நாற்பொருளுடையதாகலின். (99) 100. மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம் பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும் பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும். (இ-ள்.) மாசு படினும் - அழுக்குப் பட்டாலும் மணி தன் சீர் குன்றாது - நன்மணி தன் பெருமை குறையாது; பூசிக்கொளினும் -கழுவி எடுத்துக்கொண்டாலும், இரும்பின்கண் - இரும்பினிடத்தில், மாசு ஒட்டும் - அழுக்குச் சேரும்; கீழ்தன்னை - கீழ்மகனை; பாசத்துள் இடினும் - தளையிலிட்டு ஒறுத்தாலும் (மாசு உடைமை காட்டிவிடும்) - கீழ்மை யியல்பையே காட்டி விடுவான்;
|