பக்கம் எண் :

91

(க-து.) எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை; குற்றமே உள்ளவனும் இல்லை; அறியாமை இல்லாதவனும் இல்லை.

(வி-ரை.) பொருளுக்கேற்பச் செய்யுட்டொடரைப், பிரித்துரைத்துக்கொள்க. கணன் - சிறுமை; ஈண்டு அறியாமையென்னுஞ் சிறுமையென்க. குணனும் கணனும், போலி - யாதொன்றும் : இழிவுசிறப்பும்மை; ஏனையஉம்மைகள் எண்ணுப் பொருளன.

(104)

 105. மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு.

(இ-ள்.) மனைக்கு விளக்கம் - வீட்டுக்கு ஒளி, மடவார் - பெண்கள்; மடவார் தமக்கு - பெண்களுக்கு, தகை சால் புதல்வர் - நல்லியல்புகள் நிறைந்த மக்கள் ஒளி; மனக்கு இனிய - பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும், காதல் புதல்வர்க்கு - அன்பிற்குரிய மக்கட்கு, கல்வியே - கல்வியறிவே ஒளியாகும்; கல்விக்கும் - அக் கல்வியறிவிற்கும், ஓதின் - சொல்லுமிடத்து, புகழ் சால் - புகழ் நிறைந்த, உணர்வு - மெய்யுணர்வே ஒளியாகும்.

(க-து.) மனைக்கு விளக்கம் நன் மனைவி; நன் மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள்; அம் மக்கட்கு விளக்கம் கல்வி;கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

(வி-ரை.) மனக்கு அத்துச் சாரியை தொக்கது. புகழ்சாலுணர்வு. மெய்யுணர் வென்க. முதலில் நின்ற விளக்கம் என்னுஞ் சொல் ஏனை மூன்றிடத்துங் கூட்டப்படுதலால் முதலிலைத் தீவகமாகும்.இச்செய்யுள் மாலாதீவகம்.

(105)

 106. இன்சொலான் ஆகுங் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்.

(இ-ள்.) இன் சொலான் - இன்சொல்லால், கிழமை ஆகும் - ஒருவற்கு நட்புரிமை யுண்டாகும்; இனிப்பு இலா -