பக்கம் எண் :

3

கடந்தான் - வென்ற கண்ணபிரானது, நிறம் போன்று - நீல வண்ணத்தினை நிகர்த்து, இருண்டு - பகலவனை மறைத்தலால் இருள் பரவும்படி, எழுந்து - வெளிப்பட்டு, செல்வம் - வளப்பமிக்க, கடம்பு - கடப்பமலர் மாலையினை, அமர்ந்தான் - விரும்பி மேற்கொண்ட முருகப்பிரானது, வேல் - வேற்படையினைப் போல, மின்னி - மின்னலைச் செய்து, இயங்கு - இடம் பெயர்ந்து செல்லக்கூடிய எயில் - பொன், வெள்ளி, இரும்பு என்ற மூவித உலோகங்களால் லாக்கப்பட்ட பொற்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இருப்புக் கோட்டை என்ற மதில்களை, எய்தவன் - தனது அம்பினாற் பொடியாக்கிய சிவபிரானது, தார் - மாலையாகிய கொன்றைப் பூக்கள், பூப்ப - மலரும்படியாக, வலன் - வலமாகச் சுழன்று, ஏரும் - எழா நிற்கின்றன (என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.)

(பழையவுரை) மல்லரை வென்றவன் நிறம்போல இருளைச் செய்தெழுந்து, செல்வக் கடப்பந்தாரினை விரும்பினான் வேல்போல மின்னி, விசும்பின் இயங்குகின்ற முப்புரங்களை யெய்தவன் கொன்றைத்தார் பூப்பமிடைந்து எழாநின்றது நல்லாய் ! இக்கார்.

(விரிவுரை) முல்லை - முல்லையாகிய ஒழுக்கம் தலைவன் பிரிவாலுண்டாம் வருத்தத்தினைப் பொறுத்து, அவன் கற்பித்தவாறே அடக்கத்தினை மேற்கொண்டிருத்தல். அகப்பொருள் இல்லறம் பற்றிய அன்புடை யொழுக்கமாதலின், தலைவன் சொற்பிழையாது நடக்குங் கற்பொழுக்கமாகிய முல்லை முதற்கட் கூறப்பட்டதென்க. இத்திணை மாயோன் மேய காட்டின்கண் நிகழ்வதகாலின், ‘‘மல்லர்க் கடந்தான்,’’ என அந்நிலத்துக் கருப்பொருள்களில முதன்மையானதை முன்னர் வைத்து நூலினைத் தொடங்கலாயினர். கார் முந்துமுன் தன் தேர் முந்துமெனத் தேற்றிச் சென்ற தலைவன் வரவுக்குரிய கார்ப்பருவத்தின் தோற்றத்தைத் தோழி தலைவிக்கு எடுத்துக் காட்டி, தலைவன் வரவு அண்மியது எனத் தேற்றுதல் செய்தனள். ‘‘இயங்கெயில்,’’ என்ற தொடரினை, ‘‘தூங்கெயில்,’’ (விழாவறை காதை அடி - 4) என்ற மணிமேகலைத் தொடரினோடு ஒப்பு நோக்குக. கார் - பால் பகா வஃறிணைப் பெயர். வலன் - மேனோக்கி என்றுமாம். கார்