பக்கம் எண் :

4

மயங்கி, எழுந்து, மின்னி, பூப்ப வலனேரும், என முடிக்க. கொன்றை - முல்லையின் கருப்பொருள்களி லொன்று. 

(1)

அணிநிற மஞ்ஞை யகவ விரங்கி
மணிநிற மாமலைமேற் றாழ்ந்து - பணிமொழி !
கார்நீர்மை கொண்ட கலிவானங் காண்டொறும்
பீர்நீர்மை கொண்டன தோள்.

[பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது]

(பத.) பணிமொழி - மெல்லிய சொல்லையுடைய தோழியே, அணிநிறம் - அழகியநிறங்களைக்கொண்ட, மஞ்ஞை மயில்கள், அகவ - அன்போடு கூவியழைக்கும்படி, இரங்கி - இடித்து முழங்கி, மணி நிறம் - நீலமணி போன்ற நிறத்தினைக் கொண்ட, மா - பெரிய, மலைமேல் - மலைகளினிடத்தே, தாழ்ந்து - படிந்து, கார் நீர்மை கொண்ட - மழை காலத்தில் பெய்யுந் தன்மை மிகுதியும் வாய்ந்து காணப்பட்ட, கலி வானம் - நீர் நிரம்பிய மேகத்திரட்சியை, காண்தொறும் - யான் காணுகின்ற வேளைகளிலெல்லாம், தோள் - என் தோள்கள், பீர் நீர்மை - பீர்க்கம் பூவின் தன்மையை, கொண்டன - கொண்டு பொன் போன்ற பசலை பெற்று விளங்கின (என்று தலைவி தோழியினிடங் கூறினள்.)

(ப-ரை.) அழகிய நிறத்தையுடைய மயில்களழைக்க முழங்கி, நீலமணி நிறத்தையுடைய மாமலைகளின்கட் படிந்து, மெல்லிய மொழியை யுடையாய் ! கார் காலத்துத் தன்மையைக் கொண்ட மிக்க முகில்களைக் காணுந்தோறும் என் றோள்கள் பீரின் தன்மையைக் கொண்டன.

(விரி.) கலி - நீர். பீர் - பீர்க்கம்பூ : முதலாகு பெயர். இரங்கி, தாழ்ந்து, கொண்ட கலி வானம் என முடிக்க. வானம் - இட வாகுபெயர். பருவம் - கார்காலமாகிய பருவம். அழிதல் - மனம் வருந்தல். பசலை - ஒருவகை நிறம். இது காதன் மிகுதியாலுண்டாம் மேனி மாற்றம்.

(2)