மின்னு முழக்கு மிடியுமற் றின்ன கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை முகைவென்ற பல்லினாய் ! இல்லையோ? மற்று நமர்சென்ற நாட்டுளிக் கார். [பருவங் கண்டழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது.] (பத.) முல்லை முகை - முல்லை யரும்புகளை, வென்ற - தன்மையான் மேற்கொண்ட, பல்லினாய் - பல்லழகு மிக்க தலைவியே, நமர் - நம்மவராகிய தலைவர், சென்ற - பிரிந்து போயிருக்கும், நாட்டுள் - நாட்டிடத்திலே, இக்கார் - இங்குக் காணப்படும் மேகத் திரட்சி, மின்னும் - மின்னலும், முழக்கும் - ஆரவாரமும், இடியும் - இடி வீழ்ச்சியும், இன்ன - இவை போன்ற பிறவுமாகிய, கொலை படை - பிரிந்தாரை வருத்ததற்குரிய ஆயுதங்களை, சால - மிகுதியும், பரப்பிய - பரப்புவதற்கு, இல்லையோ - இல்லாமற் போயிற்றோ? (என்று தோழி தலைவியினிடத்தில் கூறினாள்.) (ப-ரை.) நமர் சென்ற நாட்டின்கண் மின்னும் முழக்கும் இடியும் என்று சொல்லப்பட்ட இக்கொலைப் படைகளை நிரம்பப் பரப்புவதற்கு இக்கா ரில்லையோ ; முல்லை முகை பல்லினாய் ! (விரி.) மற்று - அசை நிலைகள். பரப்பிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஓ - ஐய வினாப் பொருளுடையது. இக்கார் நமர் சென்ற நாட்டுள் பரப்பிய இல்லையோ? என முடிக்க. சால - மிகுதிப் பொருள்தரு முரிச்சொல். அன்றி, சால் என்னு முரி யடியாற்றோன்றிய, செய என் வாய்பாட்டு வினையெச்சமுமாம். கிழத்தி - தலைவி. இக்கார் அந்நாட்டுள் இருப்பின், தலைவன் வருத்த மிகுந்து வந்து சேர்ந்திருப்பன் என்பது கருத்து. (3) உள்ளார்கொல் காதல ரொண்டொடி நந்திறம் வள்வார் முரசின் குரல்போ லிடித்துரறி நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக் கொல்வாங்குக் கூர்ந்ததிக் கார். [இதுவு மது.]
|