பக்கம் எண் :

8

யில்லாத நெஞ்சினேமாகி உறைவேமை இருண்மாலை வந்து ஈராநின்றது.

(விரி.) செல்சார்வு - காரியவாகு பெயர். இனியவாய் - இனியவாக : எச்சத்திரிபு. மற்று - வினைமாற்றுப் பொருள். மாலை வந்து, தும்பி செல்சார்வுடையார்க்கு இனியவாக, உறைவேமை யீரும், என முடிக்க.

(6)

தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
யாரான்பி னாய னுவந்தூதுஞ் - சீர்சால்
சிறுகுழலோசை செறிதொடி ! வேல்கொண்
டெறிவது போலு மெனக்கு.

[இதுவு மது.]

(பத.) செறிதொடி - கைகளில் நிறைந்த வளைகளைக் கொண்ட பெண்ணே ? தேரோன் - ஒற்றையாழித் தேரவனாகிய சூரியன், மலை - மேற்கு மலைத்தொடரில், மறைந்த - மறைதலாலுண்டாகிய, செக்கர் கொள் - செவ்வானத்தைக் கொண்டுள்ள, புன்மாலை - சிறுபொழுதாகிய மாலைக்காலத்தே, ஆர் ஆன் பின் - அருமையான பசுக்கூட்டங்களின் பின்னாக வரும், ஆயன் - இடையன், உவந்து - மகிழ்ச்சிமிக்கவனாய், ஊதும் - ஊதும்படியான, சீர்சால் - சிறப்புமிக்க, சிறுகுழல் - புல்லாங் குழலினது, ஓசை - இனிய ஓசையானது, எனக்கு -, வேல் கொண்டு - படைகொண்டு, எறிவது போலும் - தாக்குவதுபோல வருத்தத்தைத் தாராநின்றது. (7)

(ப-ரை.) தேரினையுடைய பகலவன் மலையின்கண் மறைந்த செக்கர்கொண்ட புன்மாலையின்கண் அரிய ஆனிரையின் பின்னே ஆயன் விரும்பி ஊதுஞ் சீரமைந்த சிறுகுழல் இன்னோசை, வேல்கொண்டு எறிவது போலாநின்றது செறிதொடி ! எனக்கு.

(விரி.) செறிதொடி - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. மறைந்த - காரணப் பொருளில் வந்த பெய ரெச்சம் ; புன்மாலை - முல்லைத் திணையின் முதற்பொருள். ஆயன் - கருப்பொருள். இச் செய்யுளின் துறை மேற்கண்டவாறு தோழி கூற்றாகப் பழையவுரைப் பிரதிகளில் காணப்படினும், ‘எனக்கு’ என்