பக்கம் எண் :

1
 

திணைமொழி யைம்பது
விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன்


1. குறிஞ்சி

அஞ்சி யச்சுறுத்துவது

புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்
புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்
வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா
யானை யுடைய சுரம்.

(பதவுரை)புகழ்மிகு - (மணமாகிய) புகழ்மிகுந்த, சாந்து - சந்தனமரங்களை, எறிந்து - வெட்டி, புல் - பற்றும்படியான, எரி ஊட்டி -நெருப்பு வைத்தலானே, புகை - (மணத்தோடுகூடிய), புகையினை, கொடுக்க - (வான்வழியாகச்) செலுத்த, பெற்ற - கிடைக்கப் பெற்ற, புலவோர் - தேவர்கள், துகள் - பூந்தாது போன்ற மழைத்துளிகளை, பொழியும் - (நன்றியாகச்) சொரிதற்கிடமான, வான் - விண்வெளியிலே, உயர் - உயர்ந்து காணும்படியான, வெற்ப - மலை நாட்டிற்குரிய தலைமகனே! சுரம் - (நீ கடந்து வருகின்ற) வழிகள், யானை உடைய - யானைகளை யுடையனவாகும், (ஆதலால்) இரவின் - இராக்காலத்தே, வரல்வேண்டா - வருதலைச் செய்யாதிருப்பாயக. (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)

(பழையவுரை) புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப் புல்லும்படி எரியூட்டியமையானே புகையினைக் கொடுக்கப் பெற்ற அண்டர் துகள் பொழிகின்ற வானளவு முயர்ந்த வெற்பனே! இரவின்கண் வரல்வேண்டா, நீ வருகின்ற வழி யானை வருகின்ற சுரங்களாதலான்.