(விரிவுரை) இப்பாட்டின் முன் இரண்டடிகளும் ஏட்டுப் பிரதிகளின் சிதைவாற் கிடைக்கப்பெறாவாய்ப்போகக் கருதிக் கொண்டனவாம். யானை, சுரம் : பால்பகா அஃறிணைப் பெயர்கள். அஞ்சி அச்சுறுத்துவது - தலைமகற்கு வழிக்கண் உண்டாம் இடையூறுகட்குப் பயந்து, தலைமகனை இரவில் வர வேண்டா என இடையூறுகளை எடுத்துக்காட்டித் தோழி கூறுவது. குறிஞ்சி - புணர்தலும் புணர்தனிமித்தமும். இது வரைந்து புணர்தற்கு நிமித்தமாயதென்க. (1) செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மலை நாட! வரவரிதாங் கொல்லோ புனமு மடங்கின காப்பு. (பத.) காந்தள் - காந்தள்செடிகள், கை என - கைகளென்று (கண்டார் கூறும்படி,) கணமுகை - மிகுதியான மொட்டுக்களோடு, கவின - அழகுடன் விளங்க, (அவற்றை,) மந்தி - பெண்குரங்குகள், மணமுகை - மணவிழாக் காலத்தே மேற்கொள்ளும் முளைப்பாலிகைகளையுடைய மிடாக்கள், என்று எண்ணி - எனக்கருதி, கொண்டு - கைக்கொண்டு, ஆடும் - விளையாடும்படியான, விறல் - பெருமையினையுடைய, மலைநாட - மலைநாட்டிற்குரிய தலைமகனே, புனமும் - தினைப்புனமும் (கதிர் கொய்யப்பெற்று,) காப்பு - காவலும், அடங்கின - ஒழிந்தன, (அதனால் யாங்கள் இற்செறிக்கப் பெறுவேம் ஆகலின்), வரவு - (நீ இங்கு) வருதல், அரிதாம் - இல்லையாம். (ஆகவே நீ தலைமகளை மணந்து கொள்வாயாக, என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.) (ப-ரை.) திரட்சியையுடைய மொட்டுக்களைக் கையென்று கருதும்படி காந்தள் அழகுபெற அரும்ப, அதன் மணத்தையுடைய முகைகளென்று கருதி மந்திகள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மலை நாடனே! நீ இங்கு வருதலரிதாங்கொல்லோ; புனங்களும் தினையரியப்பட்டுக் காவலொழிந்தன. (விரி.) முகை - அரும்பு. மிடா, செறிப்பு - வீட்டினிடங் கொண்டு சேர்தல். கொல், ஓ : அசை நிலைகள். (2)
|