ஏட்டுப்பிரதியின் சிதைவான் மறைந்தவற்றிற்குரியனவாகக் கருதிக்கொண்டனவாம். (4) பின்னின்ற தலைமகனைக் காவன்மிகுதி சொல்லிச் சேட்படுத்ததுவிரைகமழ் சாரல் விளைபுனங் காப்பார் வரையிடை வாரன்மின் ஐய! - உரைகடியர் வில்லினர் வேலர் விரைந்துசெல் லம்பினர் கல்லிடை வாழ்ந ரெமர். (பத.) ஐய - ஐயனே! கல் இடை - இம்மலையின் கண்ணே, வாழ்நர் - வாழ்பவர்களாகிய, எமர் - எம்மவர்களாகிய வேடுவர்கள், விரை கமழ் - மணமிக்க, சாரல் - இம்மலைப்பக்கத்தே, விளைபுனம் - தினைவிளைந்துள்ள இப்புனத்தினை, உரை கடியர் - கடுஞ் சொல்லினராயும், வில்லினர் - விற்கையினராயும், வேலர் - வேலினைக் கைக்கொண்டவராயும், விரைந்து - வேகமாக, செல் - செல்லக் கூடிய, அம்பினர் - அம்பினையுடையவர்களாயும், காப்பார் - இரவின்கண் காவல் செய்வார்கள், (ஆகலின்,) வரைஇடை - இம்மலையிடத்தே, வாரன்மின் - வாராது அப்பாற் செல்வீராக. (என்று தலைமகனிடந் தோழி கூறினாள்.) (ப-ரை.) விரை கமழாநின்ற சாரலின்கண் விளைபுனங் காப்பர்கள், இம்மலையின்கண் வரவேண்டா ஐயனே! கடுங்சொல்லினர், வில்லினர், வேலர், விரைந்து செல்லுமம்பினர் மலையின்கண் வாழ்வாராகிய வெமர். (விரி.) இடை : ஏழனுருபு. எமர் : கிளைப்பெயர். கடியர், வில்லினர், வேலர், அம்பினர் : குறிப்பு முற்று வினையெச்சங்கள். பின்நிற்றல் - தோழியைக் குறை இரந்து தொடர்ந்து போதல். சேட்படுத்தல் - விலக்கல். (5) இதுவுமது யானை யுழலு மணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரே மேன லுளைய! வரவுமற் றென்னைகொல் காணினுங் காய்வ ரெமர்.
|