(பத.) ஐய - ஐயனே! யானை - யானைகள், உழலும் - அலைந்து திரியும்படியான, அணி கிளர் - அழகுமிக்க, நீள் - உயர்ந்த, வரை - மலைகள் (சூழ்ந்த), கானகம் - குறிஞ்சி நிலத்தே, வாழ்க்கை - வாழ்தலைச் செய்யும், குறவர் - மலைவேட்டுவரது, மகளிரேம் - மக்களாகிய எமது, ஏனல் உள் - தினைப்புனத்திடத்தே, வரவு - (மேன்மகனாகிய நீர்) வருதல், என்னைகொல் - யாதுபயன்கருதி? எமர் - எம்மவராகிய வேடுவர், காணினும் - நும்மைக் காணவும் நீர் இங்கே வந்தீரென்று கேட்கவும் நேர்ந்தாலும், காய்வர் - சினந்து நுமக்குத் தீங்கு புரிவர். (ஆகலின், நீர் இவ்விடத்தே வீணே வருதல் வேண்டா, என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.) (ப-ரை.) யானைகள் உழன்று திரியும் அழகுமிக்க நீள்வரைக் கானகத்து வாழும் வாழ்க்கையினையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; எனலின்கண் நீரே வருதல் என்ன பயனுளது? ஐய! நும்மைக் காணினும் நீர் வந்தீரென்று கேட்பினும் நும்மை வெகுள்வர் எமர். (விரி.) மற்று : அசைநிலை. காணினும் : உம்மை எச்சப் பொருளது. இதனை நச்சினார்க்கினியர், “நாற்றமுந் தோற்றமும்,” என்ற (தொல். கள - 23) சூத்திரத்துள், “அஞ்சியச்சுறுத்தல்,” என்பதன்கண், “தமரையஞ்சிக் கூறியது,” என்பர். கொல் : ஐயப்பொருள் தரு மிடைச்சொல். (6) இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது யாழுங் குழலு முழவு மியைந்தென வீழு மருவி விறன்மலை நன்னாட! மாழைமா னோக்கியு மாற்றா ளிரவரி னூரறி கௌவை தரும். (பத.) யாழும் - யாழின் இசையும், குழலும் - குழலோசையும், முழவும் - முழவொலியும், இயைந்த என - ஒருங்கு கூடின என்று (சொல்லும்படியாக), வீழும் - விழுந்து ஒலித்துக் கொண்டிருக்கும்படியான, அருவி - நீர் வீழ்ச்சியினையுடைய, விறல் - பெருமையினைக் கொண்ட, மலை நல் நாட - மலைகள் சூழ்ந்த நல்ல நாட்டிற்குரிய தலைமகனே! இரவரின் - (இனிமேல் நீ), இராக்காலத்தே
|