கழிவு செய்யாது, வேறிடஞ்சென்று தேடுவீராக, என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.) (ப-ரை.) வேங்கை மலர்தலான் வெறிகமழா நின்ற தண்சிலம்பின் கண்ணே வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோளையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; குருதி பாய்ந்தொழிக, இவ்விடத்தின்கண் போந்ததில்லை, ஐயனே! களிறு.
(விரி.) மற்று : அசைநிலை. இரந்து பின்னிற்றல் - தலைமகன் தன் குறையினைக்கூறித் தோழியினைத் தொடர்ந்து செல்லல். சேட்படை - தலைமகளைத் தலைமகன் அணுகவிடாமல் தோழி விலக்கல். சேண்மை+படை=சேட்படை; சேய்மைக்கண் படுத்தல்: விலக்கல். துறையினை விளக்குந் தொடரிற் பெரிய எழுத்துக்களிலுள்ள மொழிகள் ஏட்டுப் பிரதியின் சிதைவான் மறையப்பெறப் புதிதாகக் கருதிக் கொள்ளப்பட்டனவாம். இதனை நச்சினார்க்கினயர் (தொல். பொருள். கள. 23) “தலைவனைப் பேதைமை யூட்டினது,” என்பர். (8) தோழி தலைமகனை இரவுக்குறி நயப்பித்தது பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க மணிமலை நாடன் வருவான்கொல் தோழி! கணிநிறை வேங்கை மலர்ந்துவண் டார்க்கும் அணிநிற மாலைப் பொழுது. (பத.) தோழி-என்னருமைத் தோழியாகிய தலைவியே! மணி - மாணிக்கங்களையுடைய, மலைநாடன் - மலை நாட்டிற்குரிய தலைமகன், பெரும் - பெரிய, பணை - மூங்கில் போன்ற, தோள் - நம் தோள்கள், பிணி - (பிரிவாலுண்டார்) துயரத்தால் (தோன்றும்), நிறம் - பசலை நிறமானது, தீர்ந்து - நீங்கப் பெற்று, வீங்க - பூரிக்கும்படி, கணி - (தினை கொய்ய வேண்டிய காலத்தை எடுத்துக் காட்டுஞ்) சோதிடன் போன்ற பூக்கள், நிறை - மிகுந்துள்ள, வேங்கை - வேங்கை மரமானது, மலர்ந்து - பூத்து (அவைகளில்), வண்டு - தேன் வண்டுகள், ஆர்க்கும் - ஆரவாரிக்கும், அணி - அழகிய, நிறம் - நிறத்தினைக் (கொண்ட), மாலை பொழுது - மாலையாகிய வேளையிலே, வருவான்கொல் - வந்து நம்மை மகிழ்விக்க மாட்டானோ? (என்று, தோழி தலைமகளிடம் வினவினள்.)
|