(ப-ரை.) நோயான் வந்த நிறத்தீர்ந்து, பெரும் பணைத்தோள் பெருப்ப அழகிய மலைநாடன் வருவான் கொல்லோ? தோழி! கணியைப்போல நாட்சொல்லும் நிறை வேங்கை மலர்ந்து வண்டுகள் ஒலியாநின்ற நீலமணி போன்ற நிறத்தினையுடைய மாலைப்பொழுதின்கண். (விரி.) கொல் : ஐயப்பொருள் தரு மிடைச்சொல். இது, பகற்குறிக்கண் வந்து மீளும் தலைமகன் கேட்பத் தோழி தலைமகளுக்குக் கூறியதாகும். பகற்குறிக்கண் பல் லிடையூறு நேரிடுவது கண்ட தோழி, தலைமகற்கு இரவுக்குறிக்கண் விருப்பமுண்டாமாறு குறிப்பாகக் கூறத் தொடங்கினாள். நயப்பித்தல் - விரும்புவித்தல். இரவுக்குறி - இராக்காலத்தே தலைமகளும் தலைமகனும் எதிர்ப்பட்டுக் கூடுமிடம். இது தலைமகளின் இல்லினையடுத்த தோட்டத்தின்கண்ணதாம். இதனை நச்சினார்க்கினியர், (தொல். பொருள். கள. 20.), “தலைவி இரவுக்குறி நயந்தது,” என்பர். அதனைத் தோழி என்ற விளியும், மற்றைப் பொருட்போக்கும் நன்கு வலியுறுத்தாநிற்கும். (9) தலைமகன் சிறப்புறத்தானகப் படைத்து மொழி கிளவியால் தோழி வரைவு கடாயது பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன் எலவென் றிணைபயிரு மேகல்சூழ் வெற்பன் புலவுங்கொ றோழி! புணர்வறிந் தன்னை செலவுங் கடிந்தாள் புனத்து. (பத.) தோழி - என்னருமைத்தோழியாகிய தலைவியே! புணர்வு - (நங்காதலரோடு நாம் மேற்கொண்ட) புணர்ச்சியாகிய களவொழுக்கத்தினை, அன்னை - நஞ்செவிலித்தாய், அறிந்து - தெரிந்து, புனத்து - பகற்குறியாகிய புனத்தினையடுத்த சோலையிடத்தே, செலவும் - நாம் செல்லும் போக்கினையும், கடிந்தாள் - தவிர்க்கலாயினள், (அதனால், நாம் பகற்குறிக்கண் சென்று தலைமகனைக்காண வியலாதிருக்கின்றோம்; அது காரணமாக), பலவின் பழம் - பலாப்பழத்தினை, பெற்ற - அடைந்த, பை கண் - பசிய கண்களையுடைய, கடுவன் - ஆண்குரங்கானது, இணை - (தன்னுடனே) இணைந்துவாழும் பெண்குரங்கினை, எல என்று - ஏடி
|