பக்கம் எண் :

62

(இ-ள்.) தூய்மை உடைமை - மனத் தூய்மை யுடையராயிருத்தலும்; துணிவு ஆம் - (மெய்நூல்களாலே) துணியப் பட்ட, தொழில் - நற்செய்கையை, அகற்றும் - விரிக்கின்ற, வாய்மையுடைமை - உண்மையுடையவனாயிருத்தலும், வனப்பு ஆகும் - மங்கையருடைய அழகாகிய, தீமை - தீமையைத் தருவதனை, மனத்தினும் - மனத்தால் நினையாமையும்; வாயினும் - வாயால், சொல்லாமை - சொல்லாமையும்; மூன்றும் - ஆகிய இம் மூன்றும் , தவத்தில் - தவத்திலே, தருக்கினார் - செருக்கி நின்றவர்களுடைய, கோள் - கொள்கையாம்; (எ-று.)

(க-ரை.) தூய்மையும், வாய்மையாயிருப்பதுவும், தீமையை நினையாமலும் சொல்லாமலு மிருப்பதும் நற்றவமுடையார் செயல் என்பது.

துணிவு - துணியப்பட்டது : தொழிலாகுபெயர். அகற்றும் - அகல் என்னும் முதனிலை யடியாகப் பிறந்த பிறவினைப் பெயரெச்சம். தவத்தினரை நோக்கினமையின் வனப்பு பெண்ணின் வனப்புக்காயிற்று. மனத்தினாற் சொல்லாமையாவது இலக்கணையால் நினையாமையாம். தீமை - தீமையைத் தருவது - காரணம் காரியமாகச் சொல்லப்பட்டது.

(78)

 79. பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் - கொண்டிருந்
தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.

(இ-ள்.) பழி அஞ்சான் - (உலகம் பழிக்கும்) பழிப்புக்குப் பயப்படாமல், வாழும் - உயிர் வாழ்கின்ற, பசுவும் - பசுப்போல்வானும்; அழிவினால் - கேடு வந்த போது, கொண்ட - (தனக்கு உரித்தாகக்) கொண்ட, அருந்தவம் - அரிய தவத்தினை, விட்டானும் - விட்டவனும்; கொண்டிருந்தும் - (தனக்கு உட்பட்டவளாகக்) கொண்டிருந்தும், இல் - மனைவிக்கு, அஞ்சி - பயந்து, வாழும் - நடக்கின்ற, எருதும் - எருதுபோல்வானும்; இவர் மூவர் - ஆகிய இம் மூவரும், நெல் உண்டல் - (மக்கள் உண்ணக் கடவதாகிய) சோற்றை யுண்ணுதல், நெஞ்சிற்கு - (அறிவுடையார்) நெஞ்சுக்கு, ஓர் நோய் - ஒருநோயாம்; (எ-று.)