பக்கம் எண் :

14

"பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை"- திருக்குறள்.

"மனந்தூய்மை ........ இனந்தூய்மை தூவா வரும்" - என்பதில் தூவா(க) என்பது பற்றுக்கோடாக என்ற பொருளில் வந்திருக்கிறது.

"கருமஞ்செயவொருவன்கைதூவே னென்னும், பெருமையிற் பீடுடையதில்" என்னுங் குறளில், கைதூவேன் - கையொழியேன் என்ற பொருளில் வந்திருக்கிறது. ஆகவே தூவாது என்பது துவ்வாது என விகாரப்பட்டுவந்ததாகக் கொள்ளலாம்.

2. கழிதறு கண்மை பேடியிற் றுவ்வாது.

(ப-பொ.) இடமும் காலமும் அறியாது மிக்க தறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது

(ப-ரை.) கழி தறுகண்மை - இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ற அளவின்மிக்க வீரம், பேடியின் - பேடித்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது.

தறுகண்மை - அஞ்சாமை, மறம், வீரம்.

பகைவர்மேல் செல்லுதற்கேற்ற காலமும் பகைவரை வெல்லுதற்கேற்ற வசதியும் அறியாது மிக்க தறுகண்மை செய்பவன் தோல்வியடைவது நிச்சயமாதலால், அத்தறுகண்மை பேடித்தன்மையோடொக்கும்.

பகைத்திறந் தெரியாது செய்யும் கழிதறுகண்மை எனக் கொள்வதும் பொருந்தும்.

பேடித்தன்மையை, "தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை, வாளாண்மை போலக் கெடும்" என்றும் "பகையகத்துப் பேடிகை யொள்வாள் அவையகத், தஞ்சு மவன்கற்ற நூல்" (திருக்குறள்) என்றும் வருவனவற்றால் அறியலாம்.

3. நாணில் வாழ்க்கை பசித்தலிற் றுவ்வாது.

(ப-பொ.) நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) நாண்இல் வாழ்க்கை - வெட்கங்கெட்டு உண்டுவாழும் உயிர் வாழ்க்கை, பசித்தலின் - பசித்தலாகிய துன்பத்தின், துவ்வாது - நீங்கி யொழியாது.