"மனத்தி னமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று" "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்."- திருக்குறள். 6. நேராமற் கற்றது கல்வி யன்று. (ப-பொ.) கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று. (ப-ரை.) நேராமல் - ஒன்றுங் கொடாமல், கற்றது - ஓ ராசிரியனிடத்தில் கற்றது, கல்வி அன்று - கல்வியாகாது. கற்பிக்கும் ஆசிரியனுக்குப் பொருள் கொடாமல் கற்றது கல்வியென்னும் பெயர்க்கு உரியதாகாது. "நேராமை" - "தேராமை" - பாடபேதம். ‘தேராமைக் கற்றது' என்ற பாடத்துக்கு, உண்மையான பொருளைத் தெரியாமல் கற்றது கல்வி என்கிற கணக்கில் சேர்ந்ததாகாது என்று பொருள் கொள்வது. 7. வாழாமல் வருந்தியது வருத்த மன்று. (ப-பொ.) தன்னுயிர் வாழாமை வருந்தியது வருத்தமன்று. (ப-ரை.) வாழாமல் - தன் உயிர் நன்கு வாழ்வதை வேண்டாமல் பிறவுயிர்கள் இன்புற்று வாழ்வதை வேண்டி, வருந்தியது - ஒருவன் வருந்தலுற்றது, வருத்தம் அன்று - வருத்தத்திற் சேர்ந்த தாகாது. "தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம், வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்" ஆதலால், சமுதாய நன்மையை வேண்டி உழைப்பவர்க்கு அதிலுள்ள வருத்தம் வருத்தமாகத் தோன்றாது. 8. அறத்தாற்றி னீயாத தீகை யன்று. (ப-பொ.) அறத்தின் நெறியின் ஈயாதது ஈகையன்று. (ப-ரை.) அறத்தாற்றின் ஈயாதது - தருமமார்க்கத்திலே கொடாதது, ஈகை அன்று - ஈகை என்று சொல்லத் தக்கதாகாது. அறத்தாற்றின் ஈதலாவது பாத்திரமறிந்து கொடுத்தல். ஈகையின் இலக்கணமும் அதுவே.
|