பக்கம் எண் :

26

(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதர் எல்லாருள்ளும், பேர் அறிவினோன் - மிக்க அறிவுள்ளவன், இனிது வாழாமை - இன்பமடைந்து வாழாதிருத்தல், பொய் - பொய்யாம்.

மிக்க அறிவுள்ளவன் இனிது வாழ்வான் என்பது உண்மை.

"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்."- திருக்குறள்.

2. பெருஞ்சீ ரோன்றன் வெகுளியின்மை பொய்.

(ப-பொ.) பெருஞ் செல்வத்தைப் பெற்றா னொருவன் வெகுளாமை பொய்.

(ப-ரை.) பெருஞ்சீரோன் - பெருஞ்செல்வம் பெற்றிருப்பவன், வெகுளி இன்மை - கோபியாதிருத்தல், பொய் - பொய்யாம்.

பல காரியங்களையும் பல ஏவலாளரையும் கவனிப்பதில் ஏதாவது தவறு கண்டவிடத்துப் பெருஞ்செல்வர் கோபிப்பது இயல்பு உலக வியல்பு நோக்கிக் கூறியது.

3. கள்ளுண் போன்சோர் வின்மை பொய்.

(ப-பொ.) கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்.

(ப-ரை.) கள் உண்போன் - கள்ளைக் குடிப்பவன், சோர்வு இன்மை - ஒழுக்கம் தளராதிருப்பது, பொய் - பொய்யாம்.

கள்ளுண்பவனுடைய ஒழுக்கம் உறுதியாக இராமல் தளர்வடையும், சோர்வு - "மனமொழி மெய்கள் தன்வயத்தவல்ல வாதல்."

"கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு."- திருக்குறள்.

4. கால மறியாதோன் கையுறல் பொய்.

(ப-பொ.) காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்.

கையுறல் - (கை - செய்கை, கருமம். உறல் - அடைதல், பெறுதல்) - செய்கையின் பலனைப் பெறுதல்.