பக்கம் எண் :

27

(ப-ரை.) காலம் அறியாதொன் - ஒரு காரியத்தைச் செய்யலுற்று அதற்குரிய காலத்தை அறியாதவன், கையுறல் - காரியசித்தியடைதல், பொய் - பொய்யாம்.

உரிய காலத்தில் செய்யத் தொடங்கிய காரியம் கைகூடுவது நிச்சயம்.

"அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்."- திருக்குறள்.

5. மேல்வர வறியாதோன் தற்காத்தல் பொய்.

(ப-பொ.) எதிர்காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்.

(ப-ரை.) மேல் - இனி, வரவு - வரத்தத்தை, அறியாதோன் - அறியாதவன், தற்காத்தல் - தன்னைத் தான் பாதுகாத்துக்கொள்ளுதல், பொய் - பொய்யாம்.

நல்ல காரியத்துக்கு நாலிடையூறும் வரும் : அவைகளை முன்னாக அறிந்து பரிகாரம் தேடாதவன் தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்வது இல்லை.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."- திருக்குறள்.

6. உறுவினை காய்வோன் உயர்வுவேண்டல் பொய்.

(ப-பொ.) மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்.

"தக்க கருமம்" - பிரதிபேதம்

(ப-ரை.) உறுவினை - மிக்க கருமத்தை, காய்வோன் - செய்யாமல் வெறுப்பவன், உயர்வு வேண்டல் - மேன்மையடைய விரும்புதல், பொய் - பொய்யாம்.

ஆக்கம் - மேன்மேல் உயர்தல்.

உறுவினை என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, பயன் பெறுதலான காரியம், கைகூடத்தக்க காரியம் என உரைப்பதும் பொருந்தும்.

"உறுவினைக் கயர்லோன்." - பாட பேதம் (அயர்வு - சோர்வு.)