செல்வத்தா லாகும் நன்மையைக் காட்டிலும் வாய்மையா லாகும் நன்மை சிறந்தது.
"யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற."- திருக்குறள் "வளமையிற் சிறந்தன்று" - பாடபேதம். 5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை. (ப-பொ.) இளமையினும் மிக்க சிறப்புடைத்து உடம்பு நோயின்மை. (ப-ரை.) மெய் பிணியின்மை - சரீர சௌக்கியம், இளமையின் - பாலியத்தைக் காட்டிலும், சிறந்தன்று - மிக்க சிறப்புடையது. நோயோடு கூடியதாயின் இளமை வேண்டா; நோயில்லையாயின் முதுமையும் அமையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்றது ஒரு மூதுரை. 6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று. (ப-பொ.) அழகுடைமையினும் மிக்க சிறப்புடைத்து நாணுடைமை. (ப-ரை.) நாணு - அடாத காரியங்களைச் செய்யக் கூசுதலானது, நலன் உடைமையின் - ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும், சிறந்தன்று - மிக்க சிறப்புடையது. "அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு" ஆதலின், "நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் :" "நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை" ஆதலால் நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம். நாணு என்பதில் உ சாரியை. நாணாவது செய்யத் தகாதனவற்றின்கண் உள்ள மொடுங்குதல்." 7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று. (ப-பொ.) நல்ல குலமுடைமையினும் கல்வியுடைமை சிறப்புடைத்து.
|