பக்கம் எண் :

34

2. மிகமூத் தோன்காம நல்கூர்ந் தன்று.

(ப-பொ.) மிகமூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சி வறுமையுறும்.

(ப-ரை.) மிகமூத்தோன் - வயது மிகவும் மூத்தவன், காமம் - நுகரும் காமவின்பம், நல்கூர்ந்தன்று - வறுமையுடையதாம்.

யௌவனன் நுகரும் காமவின்பம்போல், வயோதிகன் நுகரும் காமவின்பம் சிறவாது.

3. செற்றுட னுறைவோனைச் சேர்தனல் கூர்ந்தன்று.

(ப-பொ.) தன்னைச் செறுத்தொழுகுவானைச் சென்றடைதல் வறுமையுறும்.

(ப-ரை.) செற்று உட்பகை கொண்டு, உடன் உறைவோனை - உடன் வசிப்பவனை, சேர்தல் - நண்பனாகக்கொண்டு ஒழுகுதல், நல் கூர்ந்தன்று - வறுமை யுடையதாம்.

செற்று (செறு - கோபி, வெறு) - கோபித்து - பகைகொண்டு.

உட்பகை யுடையாரை உண்மை நண்பராகக் கொண்டொழுகுதல் கேட்டை உண்டாக்கும்.

"உடன்பா டிலாதவர் வாழ்க்கை - குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று."- திருக்குறள்.

4. பிணிகிடந் தோன்பெற்ற வின்பநல் கூர்ந்தன்று.

(ப-பொ.) பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும் காமவின்பம் வறுமையும்.

"உடம்பை யுடையா னுகக்கும்"- பிரதிபேதம்.

(ப-ரை.) பிணிகிடந்தோன் - வியாதியடைந்து மெலிந்த சரீரத்தை யுடையவன், பெற்ற இன்பம் - நுகரும் காமவின்பம், நல்கூர்ந்தன்று - வறுமையுடையதாம்.

நோயாளி நுகரும் காமவின்பம் கேட்டைத் தருவதாம்.

5. தற்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று.

(ப-பொ.) தன்மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவி வறுமையுறும்.