பக்கம் எண் :

36

(ப-ரை.) அகம் வறியோன் - மனத்தில் நன்மையாதொன்றும் இல்லாதவனை, நண்ணல் - சென்றடைதல், நல்கூர்ந்தன்று - வறுமை யுடையதாம்.

அகம் வறியோன் - மனத்தில் ஒன்றுமில்லாதவன் - அன்பு அருள் முதலிய நன்மை யாதொன்று மின்றிச் சூனியமான மனத்தையுடையவன் - அறிவில்லாதவன். நண்ணல் - கிட்டுதல்.

"அகமறியோன்" என்ற பாடத்துக்கு, தன்மனத்தின் இயல்பை அறியாதவன் என்பது பொருள்.

9. உட்கில் வழிச்சின நல்கூர்ந் தன்று,

(ப-பொ.) மதியாதார்முன் வெகுளும் வெகுட்சி வறுமையுறும்.

உட்கு - அச்சம் : பிறர் அஞ்சத்தக்க மதிப்பு.

(ப-ரை.) உட்கு இல்வழி - மதிப்பில்லாவிடத்து, சினம் . கொள்ளும் கோபம், நல்கூர்ந்தன்று - பயனற்றதாம்.

மதிப்பில்லாதவன் பிறர்மேல் கொண்ட கோபம் பயனற்றதாகும்.

10. நட்பில் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.

(ப-பொ.) தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசை வறுமையுறும்.

(ப-ரை.) நட்பு இல்வழி - ஒருவரோடு நட்பு இல்லாத விடத்து, சேறல் - (ஒருதவியை வேண்டி) அவரை அடைதல், நல்கூர்ந்தன்று - பயனற்றதாம்.

சினேக மில்லாதவரிடம் தான் விரும்பிய ஒன்றைப் பெறுமாறு செல்வது பயனற்றதாம்.

"நட்பில் வழிச் சொலவு"- பாடபேதம்.