பக்கம் எண் :

37

X. தண்டாப் பத்து.

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்து உலகத்தில், மக்கட் கெல்லாம் - எல்லா மக்களுள்ளும், ஓங்கல் - மேன்மை யடைதலை, வேண்டுவோன் - விரும்புவோன், உயர் மொழி - பிறரை மேன்மைப் படுத்திச் சொல்லும் சொற்களை, தண்டான் - சொல்லாமல் தவிரான்.

தான் சிறப்படைய விரும்புவோன் பிறருடைய சிறப்புக்களை எடுத்துரைக்கப் பின்வாங்கமாட்டான்.

தண்டுதல் - நீங்குதல். தண்டான் - நீங்கான் - மாறான் - தவிரான். "தண்டாமலீவது தாளாண்மை" என்றும் "கண்டாம் கலுழ்வ தெவன் கொலோ? தண்டா நோய், தாம்காட்ட யாம்கண் டது" என்றும் வருவனவற்றில் இச்சொல் இப்பொருளில் வருகின்றது.

2. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்.

(ப-பொ.) ஆக்கத்தை வேண்டுவோ னொருவன் தனக்குப் பல புகழ் வரும் செய்கை களையான்.

(ப-ரை.) வீங்கல் - செல்வப் பெருக்கை, வேண்டுவோன் - விரும்புவோன், பல்புகழ் - பலவகைப் புகழ்தரும் செய்கைகளை, தண்டான் - செய்யாமல் தவிரான்.

வீங்கல் - பெருகுதல், செல்வம் பெருகுதல், ஆக்கம். புகழ் - புகழ் தருஞ்செய்கை; ஆகுபெயர்.

"ஈதல் இசைபட வாழ்தல் அது வல்ல, தூதியம் இல்லை உயிர்க்கு" (திருக்குறள்) ஆதலால் செல்வம்பெருக வேண்டுமென்று விரும்புவோன் புகழுண்டாவதற்குக் காரணமான ஈகை முதலிய செய்கைகளைச் செய்யாமல் விடான்.