பக்கம் எண் :

38

3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்.

(ப-பொ.) ஒன்றனைக் கற்றல் விரும்புவான் தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடு ஒழியான்.

(ப-ரை.) கற்றல் - ஒரு வித்தையைக் கற்றலை, வேண்டுவோன் - விரும்புகின்றவன், வழிபாடு - கற்பிக்கும் ஆசிரியனுக்குச் செய்யலான பணிவிடைகளை, தண்டான் - செய்யாமலிரான்.

வழிபாட்டின் இலக்கணம் :- "அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி, நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு, எத்திறத் தாசான் உவக்கும் அத்திறம், அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே."

"கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று" என்றார் முன். ஆதலால் "கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்" என்றார் இவ்விடத்து.

4. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செய றண்டான்.

(ப-பொ.) பிறப்புக் கெடுத்துத் தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல் ஒழியான்.

(ப-ரை.) நிற்றல் - நித்தியமாகிய முத்தியின்பத்தில் நிலைபெற்றிருத்தலை, வேண்டுவோன் - விரும்புகின்றவன், தவம் செயல் - தவஞ்செய்தல், தண்டான் - ஒழியான்.

உடல் பொருள் முதலியன நிலையில்லாதவை யாதலால் முத்தியின்பத்தில் நிலைபெற்றிருத்தலை ‘நிற்றல்' என்றார்.

தவமாவது "மனம் பொறிவழி போகது நிற்றற் பொருட்டுவிரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியிலும் பனியிலும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம்உயிர்க்கு வருந் துன்பங்களைப் பொறுத்து, பிற வுயிர்களை ஓம்பல்."

தவஞ்செய் வல்லார்க்கு அதனால் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ஞானமிக்க அளவிலே பிறப்பு வீடுகளின் உண்மையுணர்ச்சி உண்டாகும். ஆகையால் "நிற்றல் வேண்டுவோன் தவஞ்செய றண்டான்" என்றார்.

5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.

(ப-பொ.) வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன் தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.