(ப-ரை.) வாழ்க்கை - நல்வாழ்க்கையை, வேண்டுவோன் - மேன்மேல் விரும்புமவன், சூழ்ச்சி எடுத்த தொழிலைத் தக்கவரோடு ஆராய்ச்சி செய்தலை, தண்டான் - தவிரான். நல்வாழ்க்கைக்கு அவசியமானது காரியசித்தி : ஆகவே எடுத்த காரியம் நன்கு முடிதற்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒருதலை. "தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில்."- திருக்குறள். 6. மிகுதி வேண்டுவோன் வருத்தந் தண்டான். (ப-பொ.) அளவுமிக்க பொருள் வேண்டுவோன் முயற்சி வருத்தமென நீக்கான். (ப-ரை.) மிகுதி - அளவுமிக்க பொருளை, வேண்டுவோன் - விரும்புகின்றவன், வருத்தம் - அதற்குரிய முயற்சி செய்வதில் உண்டாகின்ற வருத்தம் பற்றி, தண்டான் - அம்முயற்சியைத் தவிரான். மிக்கபொருளை விரும்புகின்றவன் அதற்குரிய முயற்சி செய்தலின் உண்டாகின்ற வருத்தம் பற்றி அம்முயற்சியின்று ஒழியான். "தகுதி தண்டான்" பாடபேதம். பெருமையை விரும்புகின்றவன் நல்லொழுக்கத்தினின்று தவிரான் என்பது பொருள். 7. இன்பம் வேண்டுவோன் துன்பந் தண்டான். (ப-பொ.) இன்பத்தை விரும்பிய ஒருவன் துன்பத்தைத் துன்பமென்று களையான். (ப-ரை.) இன்பம் வேண்டுவோன் - இன்பத்தை விரும்பிய ஒருவன், துன்பம் தண்டான் - அதற்குரிய முயற்சியில் உண்டாகும் துன்பத்தினின்றும் தவிரான். சுகமாகவாழ விரும்புவோர் அதற்குரிய முயற்சியில் உண்டாகும் மெய்வருத்தம் முதலிய துன்பங்களைப் பாராட்டமாட்டார். தோட்டி போல் உழைத்துத் துரைபோல் சாப்பிடவேண்டும். துன்பத்துக்குப் பின்வாங்கினால் இன்பம் உண்டாகாது. Of sufferance comes ease. "துன்புள தெனினன்றோ இன்புளது."- இராமாயணம்.
|