பக்கம் எண் :

40

8. துன்பம் வேண்டுவோன் இன்பந் தண்டான்.

(ப-பொ.) துன்பத்தை விரும்பிய ஒருவன் இன்பத்தை இன்பமென்று களையான்.

(ப-ரை.) துன்பம் வேண்டுவோன் - ஒருகாரியத்தில் முயலும் போது உண்டாகிற துன்பத்தை. வெறாமல் விரும்பி ஏற்பவன், இன்பம் - பின்பு அதனாலுண்டாகும் இன்பத்தை, தண்டான் - வெறுத்துக் களையான்.

முன்னே துன்பங்களைப்பட்டு அதனால் இன்பமடைய விரும்புவோன் அத்துன்பங்களி னிமித்தமாக அவ்வின்பத்தை வேண்டாவென்று களையான்.

9. ஏமம் வேண்டுவோன் முறைசெய றண்டான்.

(ப-பொ.) குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.

(ப-ரை.) ஏமம் வேண்டுவோன் - குடிகளைப் பாதுகாத்தலை விரும்பிய அரசன், முறைசெயல் தண்டான் - நீதிமுறைமைப்படி அரசு செய்தல் தவிரான்.

குடிகளை ரக்ஷிக்க விரும்பிய அரசன் நீதிமுறை தவறாமல் நடப்பான்.

" ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும், தேர்ந்துசெய்வஃதே முறை" (திருக்குறள்) என்பதனால் முறையின் இலக்கணம் விளங்கும்.

10. காமம் வேண்டுவோன் குறிப்புச்செய் றண்டான்.

(ப-பொ.) காமத்தை விரும்பிய ஒருவன் குறிப்பறிதல் ஒழியான்.

(ப-ரை.) காமம் - காமவின்பத்தை, வேண்டுவோன் - விரும்புகின்றவன், குறிப்புச்செயல் - குறிப்பறிதல், தண்டான் - ஒழியான்.

குறிப்பறிதலாவது தலைமகன் தலைமகளது குறிப்பினை யறிதலும், தோழியது குறிப்பினை யறிதலுமாம்.

"இன்பந்தண்டான்" என்ற பாடத்துக்குக் காமவின்பம் நுகர்தல் தவிரான் என்பதாம்.