பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 103. குடிசெயல்வகை

அஃதாவது , ஒருவன்தான் பிறந்த குடியை மேன்மே லுயரச் செய்தலின் திறம்.இது தாழ்வு பற்றி நாணுடையார்க்கே உள்ளதாதலின்,நாணுடைமையின் பின் வைக்கப்பட்டது.

இங்குக் குடியென்றது சேரசோழ பாண்டியர் குடிகளும் சேக்கிழார் குடியும் போலக் கொடிவழியையுஞ் சரவடியையுமேயன்றி, இற்றைக்குலங்களையன்று.

ஆரியத்தால் தாழ்த்தப்பட்ட தமிழ இனத்தை முன்னேற்றிய நயன்மைக்கட்சி (Justice party) யாட்சியும் , அதன் வழிப்பட்ட இற்றைத் திராவிடர் முன்னேற்றக் கழக ஆட்சியும், விரிவுபட்ட குடிசெயல் வகைகளே. ஆயின், தமிழ இனத்தின் ஒற்றுமையைச் சிதைப்பதும், ஆரியவழி நின்று குலத்தைப் பிறப்போடு தொடர்பு படுத்துவதுமான; சில தமிழ் வகுப்புகளின் தனித்தனி முன்னேற்றமுயற்சி திருவள்ளுவர் போலும் அறிஞர் போற்றத்தக்கதன்று.

பரந்த நோக்கொடு விரிந்தவகையில் குடிசெயல் தொண்டாற்றிய தனிப்பட்ட தமிழத் தலைவர் திருவள்ளுவர் ஒருவரே.

 

கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.

 

கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் தான் பிறந்தகுடியை மேன்மேலும் முன்னேற்றும் முயற்சியைக் கைவிடேன் என்னும் பெருமைபோல; பீடு ஒருவன் உடையது இல்-சிறந்த பெருமை ஒருவனுக்கு வேறொன்று மில்லை.

குடிசெய்தற்கு என்பது அதிகாரத்தால் வந்தது. குடி என்பது குடும்பம் முதல் நாட்டினம் (Nation) வரை பல்வேறு அளவுள்ள மக்கள் வகுப்புகளைக் குறித்தாலும், குடிசெயல் என்பது அரசியல் போலக் காத்தலை மட்டுஞ் செய்யாது மேன்மேலுயர்த்துதலையும் மேற்கொள்ளுதலாலும், ’பெருமையிற் பீடுடைய தில்’, என்றார். ’’குடி செய்தற் கருமமே நடத்தலால் ’தன் கருமஞ் செய்யவென்று முரைப்பாரு முளர் ; தன் கருமமும் அதுவே யாகலானும், பிறரேல் செய்தல் தலைமையன்மையானும், அவையுரையன்மை அறிக.’’ என்னும் பரிமேலழகா மறுப்புக் கொள்ளத்தக்கதாம்.