பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 107. இரவச்சம்

அஃதாவது, உழைக்கக் கூடியவர் மானந்தீர வரும் இரப்பிற்கு அஞ்சுதல், வேண்டியதாதல். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

 

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணு
மிரவாமை கோடி யுறும்.

 

கரவாது உவந்து ஈயும்கண் அன்னார் கண்ணும் இரவாமை-தம்மிட முள்ளதை ஒளிக்காது, அரும்பெறலுறவினர் வந்தாரேயென்று அகமகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தாரிடத்தும் இரவாது வறுமை கூர்ந்திறத்தல்; கோடி உறும்-அவரிடம் இரந்து நுகர்ச்சிப் பொருளும் செல்வமும் பெறுவதினும் கோடி மடங்கு நன்றாம்.

மானங் கெட இரந்துண்பதினும், அது கெடாது இயன்றவரை யுழைத்து வறுமையிற் செம்மையாய் வாழ்தலும் அது இயலாவிடத்து உயிர் துறத்தலும், மேல் என்பதாம். உம்மை உயர்வு சிறப்பு. ’கோடி’ ஆகுபொருளது. இக்குறளால் இரத்தலின் இழிவு கூறப்பட்டது.