பக்கம் எண் :

இன்பத்துப் பால்
களவியல்

அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்

அஃதாவது, தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகள் கழிபெருமகிழ்ச்சியுற்று அப்புணர்ச்சி யின்பத்தினை யெடுத்துக் கூறல். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

இஃது இயற்கைப் புணர்ச்சி.கொடுப்பாரும் அடுப்பாருமின்றியும் முன்னறிவும் முயற்சியுமின்றியும், காதலரிருவரும் தாமே தமியராய் எதிர்ப்பட்டு இயற்கையாகப் புணரும் புணர்ச்சியாதலின், இப்பெயர் பெற்றது. இது தெய்வத்தாலேற்படுவதால் தெய்வப் புணர்ச்சியென்றும், காதலால் நிகழ்வதாற் காமப் புணர்ச்சியென்றும் பெயர்பெறும். முதன் முதலாகப் புணர்வதால் முன்னுறு புணர்ச்சியென்றும் பெயர் பெறும

நாகரிகம் முதிர்ந்த நிலையில் நிகழ்ந்த இப்பேரின்பக்களவொழுக்கத்தை, பிறழவுணர்ந்த புல்லறிவாளரும், காக்கை வெளிதென்னுங் காட்டிக் கொடுக்கியரும், கட்டுப் பாடாகத் தமிழைப் பழிக்குங் கடும்பகைவரும். மேனோக்காகத் தமிழைக் கற்ற மேலையறிஞரும். இல்லற வாழ்க்கை யேற்படாத தொன்மைக்காலத்தில் அநாகரிக மாந்தர் ஆடுமாடுகள் போற் கண்டகண்ட விடத்திற் காமத்தாற் புணர்ந்து திரிந்ததாகக் கருதுவர். அரையாடையுமின்றி அடவியில் தன்னந்தனியாய்த் திரிபவன், கூர்வேலிளைஞர் ஆயிரவர் புடைசூழத் தேருர்ந்து செல்வனோ? தன்னுணவிற்குந்தானே இயற்கைவிளைவைத் தேடித் திரிபவள், நற்றாயொடு செவிலித்தாயும் பேண ஆயிழைத் தோழியர் ஆயிரவலொடு கூடி வாழ்வளோ? கண்ணிற்கினிய வண்ணமும் வடிவுமின்றிக் கருங்காலிக் கட்டைபோல் தோன்றுங் காட்டுப் பெண்ணையும் கண்டவன், அணங்குகொல்! ஆய்மயில் கொல்! என்று வியப்பனோ? களவொழுக்கம் கற்பாக மாறுவதும், கற்பு வாழ்க்கையிற் கணவர் காவலுந் தூதும் போரும் வாணிகமும் பற்றி, காலினுங் கலத்தினும் சேணேடுந்தேயமும் செல்லுதல் அநாகரிகக் காலத்திலுண்டோ? இனி அகப்பொருள் பற்றிய தனித்துறைச் செய்யுட்களும் கோவைப் பனுவல்களும், காதல் வாழ்க்கையைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும், அறிவியல் முறையிலும் அழகிய பாவடிவிலுங் கூறுவதும், அநாகரிக நிலையைக் காட்டுமோ? இத்தகைய மடமைக் கருத்துக்கள் இக்காலத்தும் எழுந்துபரவற்கு, இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே முதற் கரணியம் என அறிக.

இனி, தமிழக் களவிற்கும் ஆரியக் காந்தருவத்திற்கு முள்ள மறைவென்னும் ஒருபுடை யொப்புமைபற்றி.

"அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை

மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே."

என்ற தொல்காப்பியர்(கள.1) கூறியுள்ளது கொண்டு, தமிழ் நூற் காதல் முறைகளை ஆரியநூல் மண முறைகளொடு தொடர்பு படுத்தி, களவொழுக்கமுங் காந்தருவமும் ஒன்றென்று கூறுவர் உரையாசிரியன்மார். கந்தருவரை வானவர் வகையினரென்று வடநூல்கள் குறிப்பதனாலும் "கந்தருவர்க்குக் கற்பின்றியமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே யமையாது." (தொல்.கள.1.உரை) என்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பதனாலும்,காந்தருவ வொழுக்கம் நெறிப்படாததும் காமவின்ப மொன்றையே கருதியதும் மக்களைந்திணைக் களவொழுக்கத்தினின்றும் வேறுபட்டது மாகுமென்று துணியப்படும். வெம்பாவியிலும்(mist) மஞ்சிலும் தோன்றும் நகர நிழலை(mirage)க் கந்தருப்ப நகரம் என்பதனாலும்,காந்தருவ வொழுக்கத்தின் கருதியற்றன்மை அறியப்படும்.

 

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள.

 

(இயற்கை புணர்ச்சி யிறுதிக்கண் தலைமகன் சொல்லியது)

கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்- கண்ணாற் கண்டும் காதாற் கேட்டும் நாவாற் சுவைத்தும் முக்கால் முகர்ந்தும் உடம்பால் தீண்டியும் நுகரப்படும் ஐம்புல வின்பங்களும், ஒண்டோடி கண்ணே உள - இவ்வொளிபொருந்திய வளையலை யணிந்தாளிடத்தேயே ஒருங்கமைந்திருக்கின்றன.

வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருளால் நுகரப்படும் ஐம்புல வின்பமும், ஒரே காலத்து இவளிடம் நுகரப்பட்டன என்று பாராட்டிக் கூறியவாறு. இது சிற்றின்பத்திற் பெண்ணின்ப மொழிந்த பிறவின்பங்களுமுண்டே யென்று சொல்வாரை யுட்கொண்டு கூறியதாகும். கேட்டலின்பம் இன்குரற் பேச்சால் மட்டுமின்றிப் பாட்டாலும் நிகழ்வதாம். உம்மை முற்றும்மை. 'ஒண்டொடி' அன்மொழித்தொகை. ஏகாரம் பிரிநிலை. "வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டடக்கிக் கூறப்பட்டன," என்று பரிமேலழகர் ஆரிய அநாகரிகத்தை ஒப்புக்கொண்டிருப்பது பாராட்டத்தக்கதே.