பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்

அஃதாவது, தலைமகளின் கண்கள் தலைமகனை விரைந்து காணும் விருப்பத்தால் வருந்துதல், விதுப்புக் காண்டற்கு விரைதல். இது இடைவிடாது நினைத்து மெலிந்த விடத்து நிகழ்வதாகலின், படர் மெலிந்திரங்கலின் பின் வைக்கப்பட்டது

 

கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

 

(நின் கண்கள் கலங்கித் தம் அழ நீ அழுதல் கூடாதென்ற தோழிக்குச் சொல்லியது)

தாம்காட்ட தண்டாநோய் யாம் கண்டது-தாம் அன்று எம் காதலரை எமக்கு வலியக் காட்டினதினாலன்றோ இத் தணியா நோயை யாம் அடைந்து; கண் தாம் கலுழ்வது எவன்கொல்-அங்ஙனமிருக்கவும், இன்று தமக்கு அவரைக் காட்டச் சொல்லி என் கண்கள் என்னை வேண்டி யழுவது என்ன கருத்தொடு? எமக்குத் தெரியவில்லையே!

இன்று அன்றுபோல் தாமே காட்டுவதல்லது யாம் காட்டுவது எங்ஙனம் என்பதாம். 'காட்ட' என்பதற்குரிய செயப்படுபொருள்வருவிக்கப்பட்டது. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை.