பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 119. பசப்புறு பருவரல்

அஃதாவது, பிரிவாற்றாமையால் தலைமகளின் மேனியிற் பசலை யென்னும் நிறவேறுபாடு தோன்றற் கேதுவாகிய வருத்தம். இது தலைமகனை நீண்ட நாளாகக் காணப்பெறாவிடத்து நிகழ்வதாகலின், கண்விதுப்பழி தலின் பின் வைக்கப்பட்டது.

பசப்பு அல்லது பசலை யென்பது பைம்பொன்னொத்த பசுமஞ்சள் நிறம் கொண்டது. அது சுணங்கு, தேமல் என்றும் பெயர் பெறும். மேனியழகினாலும் தேமல் படர்வதுண்டு. அது அழகு தேமல் எனப்படும்.

 

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற.

 

(முன்பு பிரிவுடம்பட்ட தலைமகள் அஃதாற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை விரும்பியவர்க்கு அன்று பிரிவையுடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ- அதனை ஆற்றாது இன்று பசந்த என் இயல்பை யார்க்கு எடுத்துச் செல்வேன்!

உடம்பாடு பெற்றே பிரிந்தமையின் 'நயந்தவர்' என்றும், பிரிவுக் காலத்திற்கூடுதலில்லையாதலின் 'நல்காமை' யென்றும், முன்னருடம் பட்டமையும்பின்னர் ஆற்றாது பசந்தமையும் தன் செயலே யென்பாள் 'பசந்த வென்பண்பு என்றும், தன் குற்றத்தை எவரிடமுங் கூறி முறையிட முடியாதாகலின்'யார்க்குரைக்கோ' என்றும். கூறினாள். 'உரைக்கு' செய்கு என்னும் வாய்பாட்டுத் தன்மை யொருமை யெதிர்கால வினைமுற்று. 'ஓ,' 'பிற' அசைநிலைகள்.