பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 122. கனவுநிலை யுரைத்தல்

அஃதாவது, தலைமகள் தலைமகனைப்பற்றித் தான்கண்ட கனவுகளைத் தோழிக்குச் சொல்லுதல். கனவு பொதுவாக நனவின்கண் நிகழும் நினைவுமிகுதியாற் காண்பதாகலின், இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது.

 

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

 

(தலைமகனிடமிருந்து தூதுவரக் கண்டாள் சொல்லியது.)

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துதலறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதைக் கொண்டு வந்து காட்டிய கனவிற்கு; விருந்து யாது செய்வேன் - விருந்தாக நான் எதனைச் செய்வேன்!

விருந்து என்னுஞ்சொல் விருந்தாளையும் விருந்துணவையுங் குறிக்கும். இங்கு விருந்தென்றது விருந்திற்குப் படைக்குஞ் சிறப்புணவை. கனவிற்குப் படைப்பதொன்றின்மையின், 'யாது செய்வேன்' என்றாள். 'கொல்' அசைநிலை.