பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்

அஃதாவது,கரணிய முண்டாய வி்டத்தும் புலக்கக் கருதாது புணர்ச்சி விதும்பும் நெஞ்சுடன் தலைமகன் புலத்தலும் தலைமகள் புலத்தலுமாம் . அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

 

அவல்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது.

 

(தலைமகன்கண் தவறுண்டாய விடத்தும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.)

நெஞ்சே-என் உள்ளமே!; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும்-அவருடைய உள்ளம் நம்மை நினையாது. அவருக்கே யுதவுதல் கண்டபின்பும் ; நீ எமக்கு ஆகாதது எவன்- நீ எமக்கு உதவாது அவரையே நினைத்தற்குக் கரணியம் யாது?

பிறர் நமக்குதவாது எப்போதுந் தன்னலமாகவே யிருக்கும் போது , நீ மட்டும் ஏன் தன்னலம் பேணாது பிறர் நலத்தையே நோக்குகின்றாய் என்பதாம் . அவர்க்காதல் அவர் கருதியதற் குடம் படுதல் . ' எமக்காகாதது ' என்றது புலவிக் குடம்படாமையை.