பக்கம் எண் :

அறத்துப் பால்
பாயிரம்

அதிகாரம் 3. நீத்தார் பெருமை

அஃதாவது, இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழைபெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப் பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந்துணையாகும் அறிவாற்றல் மிக்கவரும், மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத்துறந்த முழு முனிவரின் பெருமை கூறுதல்.

 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.

 

பனுவல் துணிவு - நூல்களது துணிவு; ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் - சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.

ஆசிரியர் துணிவு அவர்நூல்மேல் ஏற்றப்பட்டது.

"தொண்டரே இறைவ னுள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே".


என்னும் ஒளவையார் கூற்றைத் தழுவியது இக்குறள். பற்று, நான் என்று தன்னைப்பற்றிய அகப்பற்றும் எனது என்று தன் உடமைகளைப் பற்றிய புறப்பற்றும் என இருவகையாம்.