பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 31. வெகுளாமை

அஃதாவது, ஒருவன்மேற் சினங்கொள்வதற்குக் கரணகம் (காரணம்) இருப்பினும் அதைக்கொள்ளாமை. "உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்", என்னும் பழமொழிப்படி, வெகுளி பொய்ம்மை பற்றியும் நிகழ்வதால் , வெகுளாமை வாய்மையின் பின் வைக்கப்பட்டது.

 

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

 

சினம் செல்லிடத்துக் காப்பான் காப்பான் - சினம் தாக்கக் கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - அல்லாத வலிய இடத்தில் அது தானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தாலென், தடுக்காவிட்டாலென்? இரண்டும் ஒன்றுதானே!

'செல்லிடம்' தவத்தில் தாழ்ந்தவரும் வறியவரும் அதிகாரமில்லாதவருமாம். 'அல்லிடம்' தவத்தில் உயர்ந்தவரும் செல்வரும் அதிகாரத்திற் சிறந்தவருமாம். வலிய இடத்திற் சினங்கொள்வதால் தனக்கே கேடாதலாலும், அதையடக்குவது அறமன்மையானும், 'காக்கினென் காவாக்காலென்' என்றார்.