பக்கம் எண் :

அறத்துப் பால்
பாயிரம்

அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்

அஃதாவது, முனிவரால் கூறப்படும் மூன்றனுள் முதன்மையானதும், மக்கள் இருவகை யின்பமும் அடைதற்கும் உலகம் இனிது நடைபெறற்கும் எல்லாராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதுமான, அறத்தின் இன்றிமையாமையை வலியுறுத்திக் கூறுதல்.

 

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.

 

சிறப்பு ஈனும் - மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் வீடுபேற்றையுந் தரும்; செல்வமும் ஈனும் - இம்மையிற் செல்வத்தையுந்தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ - ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் எதுதான்?

எல்லாப் பேற்றுள்ளும் சிறந்த பேரின்ப வீடும் சிற்றின்பத்துட் சிறந்த விண்ணின்பமும் சிறப்பெனப் பெற்றன. செல்வமும் விண்ணின்பமும் இல்லறத்தார்க்கும் வீடு துறவறத்தார்க்கும் உரியனவாம். ஆகுவது ஆக்கம். ஆகுதல் மேன்மேலுயர்தல் 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. ஆக்கம் என்றது அகற்கேதுவை. ஓ அசைநிலை.