பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 37. அவாவறுத்தல்

அஃதாவது, "மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை".

என்றதற்கேற்ப, காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்தார்க்கும் பூதவுடம்புநிற்கும் வரை முன் துறக்கப்பட்ட புலன்கள்மேற் பயிற்சிவயத்தால் ஒரோவழி நினைவு செல்லுதற்கு இடமிருத்தலால் , அங்ஙனம் நேராவாறு பூதவுடம்பு நீங்கும் வரை என்றும் விழிப்பாயிருத்தற் பொருட்டு , எல்லா ஆசைகட்கும் பொது அடிப்படையாகிய அவாவை இடைவிடாது செம்பொருளுணர்வால் விலக்குதல். இது காமவெகுளி மயக்கக்கேட்டின் தொடர்ச்சியாம்.

 

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

 

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பு ஈனும் வித்து - எல்லாவுயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பை விளைவிக்கும் வித்து; அவா என்ப - அவா என்று சொல்வர் மெய்ப்பொருள் நூலார்.

உடம்பு நீக்குங் காலத்து , அடுத்து நுகரவேண்டிய வினையும் அது காட்டும் பிறவி வகுப்புக் குறியும் அவ்வகுப்பின்கண் அவாவும் உயிரின்கண் முறையேதோன்றி, அவ்வுயிரை அவ்வவா, அவ்வகுப்பின்கண் கொண்டு செல்லுமாகலின் , அதனைப் 'பிறப்பீனும்வித்து' என்றார். எல்லாவுயிரும் என்றது விலங்கு , நரகர் , மக்கள் , தேவர் என்னும் நால் வகுப்புயிர்களையும்.