பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்

அஃதாவது,

கொண்டபே-ராற்ற லுடையார்க்கு மாகா தளவின்றி
யேற்ற கருமஞ் செயல். (மூதுரை, 19)

ஆதலின், ஐவகையும் அறுவகையுமான குற்றங்களைத் தன்கண் நீக்கிய அரசன், தன் ஆட்சியைக் குற்றமின்றிச் செவ்வையாக நடாத்துதற்கு, இயற்கை மதிநுட்பத்தோடு நூலறிவும் சூழ்ச்சித் திறனும் தூயவொழுக்கமு முடைய பெரியாரைத் தன் அமைச்சராகத்துணைக்கொள்ளுதல். அதிகார, முறைமையும் இதனால் அறியப்படும்.

பரிமேலழகர் "பேரறிவுடையராவார் அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தற் குரிய ---------------- புரோகிதர்" என்று இங்கும் தம் ஆரியநஞ்சு நிறைந்த நெஞ்சைக் காட்டியுள்ளார்.

 

அறன்றிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

 

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை அறத்தின் இயல்பையறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பை; திறன் அறிந்து தேர்ந்து கொளல் - தரம் அறிந்து ஆய்ந்து பார்த்துத் தழுவிக் கொள்க.

அறத்தின் தன்மையை நூலாலன்றி உத்தியாலும் பட்டறிவாலும் அறியவேண்டுதலின், 'அறனறிந்து' என்றார். மூத்தல் ஆண்டாலும் அறிவாலும் முதிர்தல். அறிவுடையார் அரசு நயன்மையையும் (நீதியையும்) உலகியலையும் ஒருங்கே அறிந்தவர். திறனறிதல் தலையிடை கடை யென்னுந் தரமறிதல்.