பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 51. தெரிந்து தெளிதல்

அஃதாவது , அரசன் தன் ஆட்சி பற்றிய எல்லா வினைகளிலும் சிறப்பாகப் போர்வினையில் , தனக்கு உதவி செய்யும் பொருட்டு அமைச்சர் படைத்தலைவர் தூதர் முதலிய துணையதிகாரிகளை அவர் குடிப்பிறப்புக் குணம் அறிவாற்றல் செயல் பற்றி , காட்சி கருத்து உரை ஆகிய அளவைகளாலும் நூலுத்தி பட்டறிவாலும் ஆராய்ந்து தெளிதல் . அதிகார முறையும் இதனால் விளங்கும் .

 

அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
றிறந்தெரிந்து தேறப் படும்.

 

அறம் பொருள் இன்பம் உயிரச்சம் - அரசனால் ஆட்சித்துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன் அறமும் பொருளும் இன்பமும் உயிர்க்கேடு பற்றிய அச்சமும் ஆகிய ; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - நான்கு தேர்திறத்தால் மனப்பான்மை ஆராய்ந்து தெளியப்படுவான்.

நால்வகைத் தேர்திறத்துள் அறத்தேர்திறமாவது ; அரசன் குருக்களையும் அறவோரையும் ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி "நம் அரசன் அறவோனன்மையின் அவனை நீக்கிவிட்டு அவனிடத்திற்கு அறவாணனான வேறொருவனை அமர்த்தத் தீர்மானித்துள்ளோம் . இது அனைவர்க்கும் உடன்பாடே , இது பற்றி உன் கருத்தென்ன?" என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல்.

பொருள் தேர்திறமாவது ; அரசன் படைத் தலைவனையும் படைமறவரையும் ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி , "நம் அரசன் கஞ்சனுங் கையழுத்தக்காரனுமா யிருத்தலின் அவனை நீக்கிவிட்டு அவனிடத்திற்குக் கொடையாளியான வேறொருவனை அமர்த்தத் தீர்மானித்துள்ளோம். இது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததே . இது பற்றி உன்கருத்தென்ன?" என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல்.

இன்பத் தேர்திறமாவது : அரசன் தன்னுடைய உரிமைச் சுற்றமான மகளிர் கூட்டத்தொடு தொன்றுதொட்டுப் பழகிய ஒருதவ மூதாட்டியை ஆராயப்படுவானிடம் மறைவாக அனுப்பி , "அரசனது உரிமைச் சுற்றத்துள் இன்னாள் உன்னைக் கண்டு கரைகடந்த காதல் கொண்டு உன்னைக் கூட்டுவிக்குமாறு என்னை விடுத்தாள் அவளொடு கூடுவையாயின் , உனக்குப் பேரின்பமும் பெருஞ்செல்வமுங் கிட்டும்" , என்று சொல்லி அவன் விருப்பத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் செய்தல்.

உயிரச்சத் தேர்திறமாவது : அரசன் ஆராயப்படுவான் வீட்டிற்கு ஓர் அமைச்சனைக் கொண்டு ஏதேனுமொரு பொருட்டின் (நிமித்தத்தின்) மேலிட்டுப் பலரை வருவித்து , ஆராயப்படுவானுள்ளிட்ட அனைவரையும் அரசனுக்குக் கேடு சூழக்கூடினாரென்று சிறை செய்து , அவருள் ஒருவனைக்கொண்டு "இவ்வரசன் நம்மைக் கொல்லச் சூழ்கின்றமையால் நாம் அதற்குமுன் அவனைக்கொன்று விட்டு நமக்கேற்ற வேறொருவனை அரசனாக்கிக் கொள்வோம் . இது இங்குள்ள எல்லார்க்கும் இயைந்ததே . இது பற்றி உன்கருத்தென்ன?" என்று அவன் கருத்தைச் சூளுறவோடு தெரிவிக்கச் சொல்லுதல் , இந்நான்கு தேர்விலும் திரியாது தேறினனாயின் எதிர்காலத்திலும் திரியானென்று தெளியப்படுவான் என்பதாம் . தெளிதல் வினைக்கமர்த்தத் தீர்மானித்தல் . தேர்திறத்தைத் தேர்வையெனினும் ஒக்கும்.

"இவ்வடநூற் பொருண்மையை யுட்கொண்டு இவரோதியதறியாது , பிறரெல்லாம் இதனை உயிரெச்சமெனப் பாடந்திரித்துத் தத்தமக்குத்தோன்றிய வாறேயுரைத்தார்" , என்றுபரிமேலழகர் இங்குந்தம் நஞ்சைக் கக்கியிருக்கின்றார் . மூவேந்தராட்சி படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருவதென்று இவரே வேறோரிடத்திற் கூறியிருந்தும் , பாட்டி பேர்த்தியிடமிருந்து நூல்நூற்கக் கற்றுக்கொண்டாள் என்பது போல , தமிழவேந்தர் பிற்காலத்தாரியரிடம் அரசியல் , திறங்களை அறிந்து கொண்டார் என்பது தன்முரணானதே . இத்தேர் திறம் வடமொழியில் உபதா (upadha) எனப்படும் . அதற்கு மேலிடுதல் என்பதே மூலப்பொருள் . இப்பிற்காலக் குறியீடு காமந்தகீய நீதிசாரம் , பட்டி காவியம் , சிசுபாலவதம் முதலிய நூல்களில் வந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது . சென்னை நாட்டு வேத்தவை வடமொழிப்புலவராயிருந்த ஒருவர் , வட நூல்களில் விளங்காதிருந்த உபதா என்னும் செய்தி , திருக்குறளைப் படித்தபின்புதான் தமக்கு விளங்கினதாகச் சேலங்கல்லூரியில் ஒரு முறை தாம் ஆற்றிய சொற்பொழிவிற் கூறினார் . பண்டைத் தமிழ்ப் பொருள்நூல்களெல்லாம் அழிக்கப்பட்டு விட்டதனாலும் , உரையாசிரியர் மரபு ஆரிய இனமாக மாறியதினாலுமே , தமிழர் பழந்தமிழ் நாகரிகத்தைச் செவ்வையாய் அறியக் கூடாது போயிற்றென அறிக.